ஜனநாயகன் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புகார் கடிதம் வந்ததன் அடிப்படையில்தான் அப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் நேர்ந்தது. அதனால்தான் இன்னமும் அப்படத்திற்கு சான்றிதழ் வழங்கவில்லை என்று தணிக்கை வாரியம் சொல்கிறது.
அந்த புகார் கடிதத்தின் அடிப்படையில்தான் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கவில்லை என்றால் அந்த புகார் என்ன? அந்த புகாரினை தந்தவர் யார்? என்கிற விபரத்தை தணிக்கை வாரியம் தங்களுக்கு தெரிவிக்கவில்லை என்று நீதிமன்றத்தில் ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனம் வாதத்தை முன்வைத்தது.
இதற்கு நீதிபதிகள், ஜனநாயகன் படத்தை பார்த்தது யார்? புகார் எழுதியது யார்? அந்த புகார் என்ன? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு, ஜனநாயகன் படத்தினை அட்வைசரி போர்ட் உறுப்பினர்கள் பார்த்தனர். அதன் பின்னர் மண்டல அதிகாரியிடம் இருந்து படத்திற்கு எதிரான புகார் வந்தது என்று தணிக்கை வாரியம் தங்கள் தரப்பு வாதத்தினை முன்வைத்தது.

உடனே, மண்டல அதிகாரி படத்தை பார்த்தாரா? என்று தலைமை நீதிபதி கேட்க, படத்தை அவர் பார்க்கவில்லை. தணிக்கை குழுதான் படத்தை பார்த்தது. தணிக்கை வாரியம்தான் இறுதி முடிவினை எடுக்கும் என்று தணிக்கை வாரியம் பதிலளித்துள்ளது.
மேலும், ஜனநாயகனுக்கு தணிக்கை சான்றிதழ் அளிக்க வேண்டும் என்றால் மறு ஆய்வுக்குழு சான்றிதழ் அளிக்க வேண்டும். மறு ஆய்வுக்குழு சான்றிதழ் அளிக்கவில்லை என்றால் அதன் பின்னர் உயர்நீதிமன்றத்தை நாடியிருக்கலாம். மறு ஆய்வுக்குழு அமைப்பதற்குள் வழக்கு தொடுக்கப்படாவிட்டால் இந்நேரத்திற்குள் மறு ஆய்வு செய்யப்பட்டிருக்கும் என்று விளக்கம் அளித்திருக்கிறது தணிக்கைக்குழு வாரியம்.



