இந்தியா விடுதலை அடைந்ததிலிருந்து 2011ஆம் ஆண்டு வரை, கிட்டத்தட்ட 65 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசின் கடன் சுமை 1 இலட்சம் கோடி ரூபாயாக இருந்தது. அதன்பின், 10 ஆண்டுகளில், அதாவது 2021ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் கடன் சுமை 6 இலட்சம் கோடியாக உயர்ந்தது. 2021 முதல் 2025ஆம் ஆண்டு வரையிலான 4 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டின் கடன் சுமை 8.33 இலட்ச ரூபாயாக உள்ளது. அதாவது, கடந்த 4 ஆண்டுகளில் 40% முதல் 50% வரை கடன்சுமை அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டின் இந்த கடன் சுமையை உத்தரபிரதேச அரசுடன் ஒப்பிட்டு, அந்த மாநிலத்தைவிட தமிழ்நாட்டின் கடன்சுமை (Debt burden)அதிகம் என்று வரைபடத்துடன் புள்ளிவிவரம் வெளியிட்டிருப்பவர் பா.ஜ.க.வையோ அ.தி.மு.க.வையோ சார்ந்தவரல்ல. காங்கிரஸ் கட்சியில் ராகுல்காந்தி எம்.பி.க்கு நெருக்கமான ஆலோசகராக அறியப்படும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி என்பவர். தமிழ்நாட்டின் கடன்சுமையை காங்கிரஸ் ஆட்சி செய்யும் கர்நாடகா, தெலங்கானா, இமாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களுடன் அந்த காங்கிரஸ் பிரமுகர் ஒப்பிட்டிருந்தால் இயல்பான ஒப்பீடாக இருந்திருக்கும். காங்கிரசின் நேரடி எதிரியான பா.ஜ.க. ஆட்சி செய்யும் உத்தரபிரதேச அரசுடன் ஒப்பிட்டிருப்பது அவருடைய உள்நோக்கத்தையே காட்டுகிறது.
கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது, தமிழ்நாட்டில் மயிலாடுதுறை தொகுதிக்கான இந்தியா கூட்டணியின் வேட்பாளர் பெயரை அறிவிப்பதில் அதிக தாமதம் ஏற்பட்டது. 2019ல் தி.மு.க. வென்ற தொகுதி அது. 2024ல் காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக்கொடுக்கப்பட்ட நிலையில், அந்தக் கட்சியில் வேட்பாளரை அறிவிப்பதில் தாமதத்திற்கான காரணம் என்னவாக இருந்ததென்றால், காங்கிரஸ் மேலிடம் மூலமாக அந்தத் தொகுதியை பிரவீன் சக்கரவர்த்தி வலியுறுத்தியதுதான். சொந்தக் கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பு இருந்தது. மக்களிடம் அறிமுகமில்லாதவர் என்பதும் காரணமாக இருந்தது. இறுதியில், வழக்கறிஞர் சுதா அந்தத் தொகுதியின் வேட்பாளராகி எம்.பி.யானார்.
தி.மு.க. கூட்டணி வேட்பாளராகப் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத பிரவீன் சக்கரவர்த்திக்கு (Praveen Chakravarthy) தி.மு.க. தலைமை மீதும், அரசு மீதும் இரத்தத்தில் ஊறிய வெறுப்பு உண்டு. எனினும், தனிப்பட்ட காரணங்களைத் தவிர்த்து, அவர் வைத்திருக்கும் குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையை ஆராய்வதே பொருத்தமான ஒப்பீடாக இருக்கும். கடன்சுமை என்பது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, பிற மாநிலங்களிலும் உள்ளது. இந்தியாவுக்கும் கடன் சுமை உண்டு. உலக நாடுகள் பலவும் கடன் வாங்கி வருகின்றன.
இந்தியாவைப் (india) பொறுத்தவரை, 2014ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் நிறைவில், மத்திய அரசின் கடன் சுமை என்பது 58.6 இலட்சம் கோடி ரூபாயாக இருந்தது. அதன் பின் கடந்த 11 ஆண்டுகளில் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் இந்தியாவின் கடன் சுமை 181 இலட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. காங்கிரஸ் பிரமுகர் ஒப்பிட்டிருக்க வேண்டிய கடன்சுமை இதுதான். ஆனால், அவரது இரத்தத்தில் ஊறிய உணர்வோ தி.மு.க. அரசை விமர்சிப்பதாக உள்ளது.
மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படும GSDP அடிப்படையில் 28.9%க்குள் அந்த மாநிலத்தின் கடன் அளவு இருக்கவேண்டும். 2021 அ.தி.மு.க ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன் விகிதம் 29%ஆக இருந்தது. இந்த 2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் GSDP அளவுடன் ஒப்பிடும்போது, கடன்விகிதம் என்பது 26.4% என்ற அளவிலேதான் உள்ளது. உத்தரபிரதேசத்தின் கடன் சுமை 9.04 இலட்சம் கோடி ரூபாய். அந்த மாநிலத்தின் GSDPயுடன் ஒப்பிடும்போது 29.4% என்ற அளவில், நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக உள்ளது.
தமிழ்நாட்டின் கடன் அளவு எப்படி கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது? தொழில்துறை முதலீடுகள், உற்பத்தி, வணிகம், வேலைவாய்ப்புகள் ஆகியவற்றால் பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்ற மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது. அதனால், கடன்சுமையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதுடன், கடன் தொகையையும் சமூக நலத் திட்டங்களுக்கு பயன்படுத்தி, அதன் மூலமாக தனி மனிதர்களின் வாழ்வில் முன்னேற்றத்தை உருவாக்கி, சமுதாய முதலீடாக மாற்றியுள்ளது.
தமிழ்நாட்டின் கடன் அளவு என்பது கட்டுப்பாட்டில் உள்ளது. வளர்ச்சி என்பது சீராக உள்ளது. கொரோனா பேரிடர் நிவாரணம், இயற்கை பேரிடர் நிவாரணம் போன்ற நெருக்கடிகளையும், மத்திய அரசின் பாரபட்சமான அணுகுமுறையையும் எதிர்கொண்டு வரும் தமிழ்நாடு அரசு, இந்திய அரசு நிர்ணயித்துள்ள பல இலக்குகளிலும் முன்னேறி இருக்கிறது. இன்னும் பல முன்னேற்றங்களை அடைய வேண்டியுள்ளது.
தலையங்கம் : தமிழ்நாடு – கடனா? வளர்ச்சியா?


