இந்திய வரலாற்றை நாம் இதுவரை அறிந்த விதமே தவறானதா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது கீழடி அகழாய்வு. அந்தக் கேள்வியை உறுதியாகவும் ஆதாரங்களோடும் முன்வைத்தவர் இந்திய தொல்லியல் துறை ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் (Amarnath Ramakrishnan).
வரலாற்றை மறுபரிசீலனை செய்ய வைக்கும் கீழடி
மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசிய கருத்துகள், வெறும் கருத்து வேறுபாடுகளாக அல்லாமல், இந்திய துணைக்கண்டத்தின் மனித வரலாற்றை புதிய கோணத்தில் புரிந்துகொள்ள வைக்கும் அறிவியல் உண்மைகளாக அமைந்துள்ளன.

15 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித வாழ்வு
அதாவது, இந்திய துணைக்கண்டத்தில் 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைத்த ஒரே இடம் தமிழ்நாடு தான் என அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறுவது, பெரும் அதிர்ச்சியையும் ஆச்சிரியத்தையும் ஏற்படுத்துகிறது.
மனித பரிணாம வரலாற்றில் தமிழ்நாடு
மேலும், ஹோமோ சேப்பியன்ஸ் இனத்தின் மரபணு தடயங்கள் தமிழ்நாட்டில் கிடைத்துள்ளன என்றும், கடந்த 60,000 ஆண்டுகளாக மனிதர்கள் இப்பகுதியில் தொடர்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர் என்றும் அவர் கூறுகிறார். ஆனால், இத்தகைய ஆழமான வரலாற்று உண்மைகளை இன்றைய சமூகம் முழுமையாக புரிந்துகொள்ளவில்லை என்பதே அவரின் மிகப்பெரிய வருத்தமாக இருக்கிறது.
வெளியிடப்படாத கீழடி ஆய்வு அறிக்கை
இதனையடுத்து, கீழடி அகழாய்வு தொடர்பாக சமர்ப்பித்த முழுமையான ஆய்வு அறிக்கை இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றும், அறிக்கையை திருத்தி மீண்டும் சமர்ப்பிக்குமாறு மத்திய அரசு கடிதம் அனுப்பியதாக அவர் வெளிப்படையாகத் தெரிவித்தார்.

“எழுத்துப் பிழைகள் திருத்தலாம்; உண்மைகளை இல்லை”
குறிப்பாக,”அறிக்கையில் உள்ள எழுத்துப் பிழைகளை வேண்டுமானால் திருத்தித் தருவேன். ஆனால் கண்டறிந்த உண்மைகளை ஒருபோதும் திருத்த மாட்டேன்” என்று அவர் உறுதியாக கூறியுள்ளார்.(Online Tamil News)
5 % அகழாய்வே உலகளாவிய விவாதமாக மாறிய தருணம்
மேலும், கீழடியில் இதுவரை ஐந்து சதவீத ஆய்வுகள் கூட முடிவடையாத நிலையில், அந்தச் சிறிய அளவிலான அகழாய்வே உலக அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் சங்ககால நாகரீகத்தின் காலவரம்பு, தமிழகத்தின் பண்பாட்டு தொடர்ச்சி, இந்திய வரலாற்றின் ஒரே நேரியல் பார்வை ஆகிய அனைத்தையும் இந்த ஆய்வு கேள்விக்குள்ளாக்கியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், முழுமையான ஆய்வு நடந்தால், அது எதிர்கால ஆய்வாளர்களுக்கு பத்தாயிரம் புதிய ஆய்வுகளை மேற்கொள்ள வழிவகுக்கும் என்றும் அமர்நாத் ராமகிருஷ்ணன் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்.

மேலும், கல்வி முறையில் சங்ககாலம் கி.மு. 300-ல் தொடங்கியது என்று கற்பிக்கப்படுவதையும் கடுமையாக விமர்சித்த அவர், தமிழகத்தில் நடத்தப்பட்ட அகழாய்வுகள் பல புதிய ஆதாரங்களை வழங்கியுள்ளன என்றும் ஆனால், அந்த ஆதாரங்கள் வெளிப்படையாக வெளியிடப்படாததாலும், ஏற்க மறுப்பதாலும் வரலாற்றை புதுப்பிக்க முடியாமல் இருப்பதாக அவர் கூறுகிறார்.
கீழடி என்றாலே சிலருக்கு ஏன் பயம் வருகிறது?
வரலாற்றை அரசியல் பார்வையில் அல்ல, அறிவியல் பார்வையில் அணுகினால்தான் உண்மையான தரவுகள் வெளிவரும் என்பது அவரது உறுதியான கருத்தாக உள்ளது. அதே நேரத்தில், “கீழடி” என்றாலே சிலருக்கு ஏன் பயமும் அதிர்வும் ஏற்படுகிறது என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.
முடிவில், கீழடி அகழாய்வு (Keeladi excavation) என்பது ஒரு மாநிலத்தின் பெருமை பற்றிய விவகாரம் அல்ல. இந்திய வரலாறு எவ்வாறு எழுதப்பட வேண்டும், யார் அதை நிர்ணயிக்க வேண்டும், அதிகாரமா அல்லது ஆதாரமா என்ற அடிப்படை கேள்விகளுக்கான தொடக்கமாக இது மாறியுள்ளது.


