காஞ்சிபுரம் சேலை கட்டி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்ததை, தமிழ்நாட்டுப் பாரம்பரியத்தின் அடையாளமாகப் பெருமைப்படுத்தி பா.ஜ.க.வினர் பதிவிட்டுக் கொண்டிருந்த நேரத்தில், பங்குச்சந்தையில் சென்செக்ஸ் புள்ளிகளும், நிஃப்டி புள்ளிகளும் சரசரவென சரியத் தொடங்கின.
உடல்நிலை எப்படி இருக்கிறது என்பதற்கு நாடிப் பிடித்துப் பார்ப்பது போல, பட்ஜெட் எப்படி இருக்கிறது என்பதை பங்குச் சந்தை எதிரொலிக்கும். பொதுவாக, கார் உள்ளிட்ட தொழில்துறை-வருமான வரி வரம்பு-வங்கிக்கடன் வசதிகள் ஆகியவற்றுக்கான சாதகமான அம்சங்கள் பட்ஜெட்டில் இருக்கும்போது, பங்குச்சந்தையில் புள்ளிகள் உயர்வது வழக்கம். அதற்கு நேர்மாறாக, இந்த முறை பா.ஜ.க. அரசின் பட்ஜெட் தாக்கலின்போது பங்குச் சந்தை பெரும் சரிவை சந்தித்தது.
பங்குச்சந்தையில் பங்குகளை வாங்கி விற்கும்போது அரசுக்கு செலுத்தும் செக்யூரிட்டி வரியை (எஸ்.டி.டி) பட்ஜெட்டில் உயர்த்திவிட்டதால், இனி ஒவ்வொரு பங்கு வாங்கும்போதும் 500 ரூபாய்க்கு மேல் வரி கட்ட வேண்டும். இது பங்குகளில் முதலீடு செய்பவர்களைப் பாதிக்கும். வெளிநாட்டு நிறுவனங்கள் கடந்த நிதியாண்டில் மட்டும் 200 இலட்சம் கோடி ரூபாயை பங்குச் சந்தையிலிருந்து விலக்கியிருக்கின்றன. இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் குறைந்து கொண்டே வருகின்றன.(Online Tamil News)
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு பெருமளவு சரிந்திருப்பதைப் போலேவே, ஆஸ்திரேலியா-மலேஷியா டாலர்கள், இங்கிலாந்தின் பவுண்ட் உள்ளிட்ட கரன்சிகளுடன் ஒப்பிடும் போது இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து கிடக்கிறது. இதனால் ஜவுளி உள்ளிட்ட தொழில்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பட்ஜெட்டில் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வதற்கோ, வெளிநாட்டு முதலீடுகள் தொழில்துறையிலும்-பங்குச் சந்தையிலும் வருவதற்கோ முறையான திட்டங்கள் எதுவும் இல்லாததால் 2026-27 பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்யும்போதே பங்குச் சந்தையில் அதன் தாக்கம் உடனடியாகத் தெரிந்தது.
பட்ஜெட்டின் உடனடித் தாக்கம் தெரியக்கூடிய பங்குச்சந்தையில் இந்த நிலை என்றால், இந்தியாவின் மிக முக்கியமான துறையான வேளாண்துறையிலோ, பண வரவுக்கேற்ற ரியல் எஸ்டேட் போன்ற துறைகளிலோ நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டினால் என்ன பலன் என்று வல்லுநர்கள் ஆராய்ச்சிகளைத் தொடங்கினர். பெரும்பாலானவர்களின் கருத்துகள் எதிர்மறையாகவே இருந்தன. பட்ஜெட் என்பது ஒரு பொதுவான மரபு என்கிற அளவில் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதையும் சில பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்தனர். நிதியமைச்சரிடம் நாங்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை. அப்படியிருந்தும், கூடுதல் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார் நிர்மலா சீதாராமன் என்றே பலரும் கருத்துகளைத் தெரிவித்தனர்.
இந்தியாவில் பட்டினிச் சாவைத் தடுத்து, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தியதில் மகாத்மா காந்தி பெயரிலான 100 நாள் வேலைத் திட்டத்திற்கு முக்கிய பங்கு உண்டு. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த இந்தத் திட்டத்தில் இருந்த மகாத்மா காந்தியின் பெயரை நீக்கிய பா.ஜ.க. அரசு, விக்சித் பாரத் ஜி-ராம்-ஜி என்று பெயர் மாற்றம் செய்து, மத்திய அரசின் பங்களிப்பைக் குறைத்து, மாநில அரசுகளுக்கு சுமையை ஏற்றியுள்ளது.
கடந்த நிதியாண்டில் 100 நாள் வேலைக்கு 68ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கிய மத்திய அரசு தற்போது விக்சித் பாரத் 125 நாட்கள் வேலை வழங்கும் எனச் சொல்லப்பட்டுள்ள நிலையில், சுமார் 10ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தத் தொகை என்பது 125 நாட்கள் வேலை வழங்குவதற்கு நிச்சயமாகப் போதாது. கிராமப்புற மக்களுக்கு உத்தரவாதமளித்த வேலைவாய்ப்புத் திட்டத்தை மெல்ல மெல்ல ஒழித்துக் கட்டுவதற்கான முதல் கட்ட நடவடிக்கையாகவே இது அமைந்துள்ளது.
மோடி தலைமையிலான மத்திய அரசு அமைந்ததிலிருந்து தமிழ்நாட்டுக்கானத் திட்டங்கள் எதுவும் சிறப்பாக நிறைவேற்றப்படாத நிலையில், இந்த பட்ஜெட்டிலும் தமிழ்நாட்டைப் புறக்கணித்திருக்கிறது பா.ஜ.க. அரசு. தேர்தலில் தங்கள் கூட்டணி வெற்றி பெற்றால் தமிழ்நாட்டில் டபுள் இன்ஜின் சர்க்கார் அமையும் என்று பிரதமர் மோடி பிரச்சாரம் செய்துவிட்டுச் சென்ற சில நாட்களில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், தமிழ்நாட்டின் நலன் சார்ந்த எந்தத் திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. நிலுவையில் உள்ள கல்வி நிதி, பேரிடர் நிவாரண நிதி உள்ளிட்ட எது பற்றியும் பட்ஜெட்டில் எதுவுமில்லை. ஒவ்வொரு முறையும் நிதியமைச்சர் சொல்கின்ற திருக்குறள்கூட இந்த முறை இல்லை.
விவசாயம், நெசவு, தொழில்கள், பங்கு முதலீடு ஆகிய துறைகளில் ஏமாற்றத்தை அளித்து, தமிழ்நாட்டை மொத்தமாக வஞ்சித்திருக்கிறது மத்திய அரசின் பட்ஜெட்.



