‘’எங்களின் முடிவு பல பேரின் தூக்கத்தைக் கெடுக்கும்’’ என்று தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறார் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன்.
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய வேல்முருகன் இந்த 2026 சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்தார். இதன் பின்னர் சிறிய கட்சிகள் மற்றும் அமைப்புகளை ஒன்று திரட்டி புதிய அணியை உருவாக்கி இருக்கிறார் வேல்முருகன்.

அதிமுக கூட்டணியில் அதிருப்தியில் இருக்கும் புதிய தமிழகம், புரட்சி பாரதம் கட்சிகளையும் தனது அணிக்குள் வர வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார். திமுக கூட்டணியில் அதிருப்தியில் இருக்கும் தனியரசுவுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார்.எதிர்காலத்தில் சீமானுடனும் கூட்டணி அமைப்போம் என்கிறார்.

இந்த புதிய அணியின் அறிமுக கூட்டத்தில்தான், ‘’எங்களின் முடிவு பல பேரின் தூக்கத்தைக் கெடுக்கும்’’ என்று சொன்னார் வேல்முருகன்.

திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி,நாதக, தவெக மற்றும் ராமதாஸ் – சசிகலா அணி என 2026ல் ஐந்து முனை போட்டி உறுதியாகி இருந்த நிலையில் வேல்முருகன் அணியும் இதில் சேர்ந்து தமிழகத்தின் 2026 தேர்தல் களம் 6 முனை போட்டியை சந்திக்கிறது என்பது உறுதியாகிறது.



