தேசிய தலைநகரான டெல்லியில் கடந்த 2026 ஆம் ஆண்டின் முதல் இரண்டு வாரங்களிலேயே நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு, 5,081 டீனேஜர்கள் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதில் 3,970 பேர் சிறுமிகள் ஆவர். மேலும் டெல்லியில் கடந்த 10 ஆண்டுகளில் மாயமாகி கண்டுபிடிக்கப்படாமல் உள்ளவர்கள் எண்ணிக்கை 52,000க்கும் அதிகமாக உள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

2 வாரத்தில் 800-க்கும் மேற்பட்டோர் மாயம் !
டெல்லி (Delhi) காவல்துறை தரவுகளின் அடிப்படையில், ஜனவரி மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் 800-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக பதிவாகியுள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் சிறார்கள் என்பதே பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், காணாமல் போனவர்களில் 509 பேர் பெண்கள் மற்றும் சிறுமிகள் ஆவர். மேலும், 191 பேர் 18 வயதிற்குட்பட்ட சிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இளம்பெண்கள் அதிக அளவில் காணாமல் போவது, டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது. காணாமல் போன சிறார்களில் பெரும்பாலானவர்கள் 12 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், அவர்களில் சிறுமிகள் எண்ணிக்கை அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (Online Tamil News)

காவல்துறையின் தகவலின்படி, காணாமல் போனவர்களில் சிலர் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டாலும், இன்னும் பலர் குறித்து எந்த தகவலும் கிடைக்காத நிலை தொடர்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மன வேதனையிலும், அச்சத்திலும் வாழ்ந்து வருகின்றனர்.
மேலும், தினசரி சராசரியாக 50-க்கும் மேற்பட்டோர் காணாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளதால் தலைநகர் டெல்லியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவங்களுக்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. என்னவென்றால் வீட்டைவிட்டு வெளியேறுதல், குடும்ப பிரச்சினைகள், வேலை அல்லது திருமணம் என்ற பெயரில் ஏமாற்றப்படுதல், மனிதக் கடத்தல் போன்ற சந்தேகங்களும் முன்வைக்கப்படுகின்றன. இருப்பினும், இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை அதிகமானோர் காணாமல் போனதற்கான தெளிவான காரணத்தை அதிகாரிகள் இதுவரை விளக்கவில்லை என்பதே பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய தலைநகரில் இவ்வளவு பெரிய அளவில் காணாமல் போகும் சம்பவங்கள் நடைபெறுவது, நாட்டின் பாதுகாப்பு நிலை குறித்து கடும் கவலையை ஏற்படுத்தும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. காணாமல் போனவர்கள் விரைவில் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்பதே தற்போது பொதுமக்களின் ஒரே எதிர்பார்ப்பாக உள்ளது.


