தீபாவளி , பொங்கலுக்கு ஆஃபர் கொடுப்பது போன்று ‘ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு’ என்று ஆஃபர் அறிவித்திருக்கிறார் விஜய் என்று விசிக தலைவர் திருமாவளவன் எளிதாகக் கடந்து சென்றாலும் கூட, விக்கிரவாண்டியில் நடந்த தவெக முதல் மாநாட்டில் விஜய் பற்ற வைத்த நெருப்பு தமிழக கூட்டணி கட்சிகளுக்குள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.
இதை நன்கு உணர்ந்த விஜய் அண்மையில் சேலத்தில் நடந்த தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது விக்கிரவாண்டியில் நான் போட்ட குண்டு இப்போது பல கூட்டணிகளுக்குள் வெடித்துச் சிதறுகிறது என்று குறிப்பிட்டார்.

குறிப்பாக காங்கிரஸ் கூட்டணிக்குள் விஜய் போட்ட குண்டு பெரிதாக வெடித்திருக்கிறது. ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று விஜய் சொன்னதை நம்பி தவெகவுடன் கூட்டணிக்கு போக வேண்டும் என்று காங்கிரஸ் தேசிய செயலாளரும் விருதுநகர் எம்.பியுமான மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட சிலர் பேசி வருகின்றனர்.

இது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருக்கும் செல்வப் பெருந்தகைக்கு பெரும் நெருக்கடியை கொடுத்து வருகிறது. கூட்டணிக்குள் குந்தகம் ஏற்படுத்தும் வகையில் இப்படி ஆளாளுக்கு ஒரு கருத்தை சொல்லி வருவதால் இது குறித்த பஞ்சாயத்து அண்மையில் டெல்லியில் நடந்தது. அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினரை அழைத்து ராகுல் காந்தி, கார்கே, கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தியிருந்தனர். அப்போது கூட்டணி தொடர்பாக யாரும் பொதுவெளியில் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப் பட்டிருக்கிறார்கள். ஆனாலும் அதன் பின்னரும் மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட சிலர் திமுக கூட்டணி வேண்டாம் அப்படி கூட்டணியில் இருந்தால் ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும் என்று பேசி வருகின்றனர்.

திருப்பரங்குன்றத்தில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தை கூட்டி ஆட்சியில் பங்கு வேண்டும் என்று தீர்மானமும் நிறைவேற்றி இருக்கிறார் மாணிக்கம் தாகூர். இது கூட்டணியில் இருக்கும் செல்வப் பெருந்தகைக்கு மேலும் நெருக்கடியை தர மாநில தலைவர் என்கிற பெயரில் நான் ஒருவன் இருக்க ஆளாளுக்கு கூட்டம் நடத்துவதும் தீர்மானம் போடுவதும் என்று இருந்தால் என்ன செய்வது என்று வெகுண்டு எழுந்திருக்கிறார் .
கூட்டணிக்கு இப்படி பங்கம் ஏற்படும் வகையில் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதை டெல்லி தலைமை ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. அவர்கள் இந்த அளவுக்கு பேசுவதற்கு யார் தைரியம் கொடுக்கிறார்கள். யார் கொடுத்த சாவியின் பெயரில் இப்படி எல்லாம் பேசுகிறார்கள். எதற்கு அவர்களை டெல்லி தலைமை கட்டுப்படுத்தவில்லை என்று நிர்வாகிகள் மட்டத்தில் ஆத்திரப்பட்டிருக்கிறார் செல்வப் பெருந்தகை.

இந்த நிலையில் தான் பெங்களூர் வந்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, செல்வ பெருந்தகையை அழைத்து இருக்கிறார். இந்த அழைப்பின் பேரில் நேற்று முன் தினம் பெங்களூர் சென்ற செல்வப் பெருந்தகை கூட்டணி குழப்பம் குறித்து கார்கேவிடம் குமுறி இருக்கிறார். ‘’இப்போது இருக்கும் சூழலில் திமுகவிடம் கூடுதல் இடங்களை வேண்டுமானால் பெற்றுக் கொண்டு அதில் வெற்றி பெறுவது தான் புத்திசாலித்தனமானது. வெற்றி பெற்று எம்எல்ஏக்களையும் எம்.பிக்களையும் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமே தவிர அதை விடுத்து தவெகவுடன் கூட்டணி என்பது தற்கொலைக்கு சமமாகிவிடும் ’’என்று எடுத்துச் சொல்லி இருக்கிறார்.
அதை கேட்ட கார்கே அதுதான் சரியானது. திமுகவுடன் கூடுதல் இடங்களை மட்டும் கேட்டு பெற என்ன செய்யலாம் அதை மட்டும் செய்யலாம் என்று சொல்லி இருக்கிறார். அதுவரையிலும் கூட்டணி குறித்து ஆளாளுக்கு யாரும் கருத்து சொல்லாத வகையில் தான் பார்த்துக் கொள்வதாக செல்வப் பெருந்தகைக்கு உறுதியளித்திருக்கிறார் கார்கே.



