இந்தியக் கடற்படை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிப்ரவரி 18 முதல் 25 வரை நடத்திய ‘மிலன் 2026’ என்ற பிரம்மாண்ட சர்வதேசக் கூட்டுப் பயிற்சியில், ஈரானிய போர்க்கப்பல் மற்றும் அதன் வீரர்கள் கலந்துகொண்டனர்.
நட்பு நாடுகளுக்கிடையேயான கடல்சார் உறவை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியா விடுத்த அழைப்பை ஏற்று ஈரான் இந்த பயிற்சியில் பங்கேற்றது. பயிற்சியை வெற்றிகரமாக முடித்துவிட்டுத் தாயகம் திரும்பிக் கொண்டிருந்தபோது, இலங்கையின் காலி கடற்கரையிலிருந்து சுமார் 40 நாட்டிகல் மைல் தொலைவில் உள்ள சர்வதேசக் கடல் பகுதியில் அந்தப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ‘Mark 48’ டார்பிடோ ஏவுகணை ஏவப்பட்டது. அமெரிக்காவின் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ என்ற ராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், ஈரானியப் போர்க்கப்பல் கடலில் மூழ்கியது.

இந்த கோரச் சம்பவத்தில் ஈரானியக் கடற்படையைச் சேர்ந்த 87 வீரர்கள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் பலர் கடலில் காணாமல் போயுள்ளனர். தாக்குதல் குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த இலங்கை கடற்படையினர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு, கடலில் தத்தளித்த 32 வீரர்களை உயிருடன் மீட்டு காலி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தனது கடல் எல்லைக்கு மிக அருகில் நடந்த இந்தத் தாக்குதல் குறித்து கவலை தெரிவித்துள்ள இலங்கை அரசு, காயமடைந்தவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறியுள்ளது.

இதற்கிடையில், இந்திய மண்ணில் ஒரு விருந்தினராகப் பங்கேற்றுவிட்டுத் திரும்பிய கப்பல் மீது இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டும், இது குறித்து இந்திய ஒன்றிய அரசு இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ கருத்தையும் தெரிவிக்காமல் மௌனம் காப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மௌனம் குறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருவதுடன், இது இந்தியாவின் சர்வதேச உறவுகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர்.(Online Tamil News)


