2026 சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அஇஅதிமுக (AIADMK) சார்பில் புதிய நீதிக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மதுரை மத்திய தொகுதிக்கு இயக்குநர் சுந்தர் சி -ஐ வேட்பாளராக நிறுத்தி இருக்கிறார் அக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம். இந்த தொகுதியில் வென்று அமைச்சராக உள்ளா பி.டி.ஆர். பழனிவேல்ராஜன்.
இது குறித்து ஏசி சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மதுரை மத்திய தொகுதிக்கு கீழ்கண்ட வேட்பாளரை முடிவு செய்து அறிவிக்கப்படுகிறது.

மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் திரைப்பட தயாரிப்பாளர் இயக்குனர் நடிகர் சுந்தர் சி வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். 30 .3. 2026 திங்கட்கிழமை அன்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதி மற்றும் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட உள்ளது. இரண்டாவது வேட்பாளராக சென்னையில் திங்கட்கிழமை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அறிமுகப்படுத்த உள்ளோம்’’ என்று தெரிவித்திருக்கிறார்.
குஷ்பு இது குறித்து, ‘’இதோ, அவர் அரசியலில் அடியெடுத்து வைக்கிறார்! இயக்குநரும் நடிகருமான சுந்தர் சி புதிய நீதிக்கட்சியின் வேட்பாளராக மதுரையிலிருந்து அரசியலில் களமிறங்குகிறார். இவர் என்.டி.ஏ. கூட்டணியின் சார்பில், அதிமுகவின் சின்னமான இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிடவுள்ளார்.
தனது மறைந்த தந்தை சிதம்பரம்பிள்ளை, தனது 94 வயதுத் தாயார் , குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆசியுடன், அவர் உங்கள் ஆதரவை நாடுகிறார்.

ஏ.சி.சண்முகம் வழிகாட்டுதலிலும், தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆதரவிலும், பாஜக மாநிலத் தலைவர் சகோதரர் நயினார் நாகேந்திரன் மற்றும் NDA கூட்டணியைச் சேர்ந்த அனைத்துத் தலைவர்கள், தொண்டர்கள், நிர்வாகிகள் ஆகியோரின் துணையுடனும், அவர் தேர்தலில் வெற்றி பெற்று, எப்போதும் போலவே மக்களின் பிரதிநிதியாகத் திகழ்வதாக உறுதியளிக்கிறார்.
அவருடைய வாழ்க்கைத்துணையாகிய நான், மிகுந்த பெருமையுடன் இங்கு நிற்கிறேன். கடந்த 30 ஆண்டுகளாகத் தமிழக மக்களைத் தன் கலைப்பணிகள் மூலம் மகிழ்வித்து வந்த இவர், தன்னை இன்றைய நிலைக்கு உயர்த்திய மக்களுக்குத் தனது மிகச்சிறந்த பங்களிப்பை வழங்குவார் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். நாங்கள் பணிவுடன் உங்கள் நன்மதிப்பு, ஆதரவு மற்றும் நம்பிக்கையை வேண்டுகிறோம்.
மதுரை மக்களே, இதோ அவர் வருகிறார்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.



