தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, தனது 31-வது பிறந்தநாளை முன்னிட்டு கேரளாவில் உள்ள ஒன்பது பழமையான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்களுக்கு சுமார் 22.5 கோடி ரூபாயை நிதியுதவியாக வழங்கியுள்ளார்.

ஏப்ரல் 10-ம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடிய அவர், கேரளாவின் ஆன்மீக மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த அறப்பணியைச் செய்துள்ளார்.
இந்த நிதியுதவியில் பெரும் பகுதியாக, கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தளிப்பரம்பா ராஜராஜேஸ்வர கோயிலுக்கு 12 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 200 ஆண்டுகளாகச் சிதிலமடைந்து காணப்படும் இக்கோயிலின் கிழக்குக் கோபுரத்தைப் புதுப்பிப்பதற்கும், மற்ற கட்டுமானப் பணிகளுக்கும் இந்தத் தொகை பயன்படுத்தப்பட உள்ளது. அதேபோல், புகழ்பெற்ற குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலுக்கு 6 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையானது கோயில் யானைகளின் பராமரிப்பு, அவற்றுக்கான நவீன மருத்துவமனை அமைத்தல் மற்றும் பிற வசதிகளுக்காகச் செலவிடப்பட உள்ளது.

மேலும், தலச்சேரி திருவங்காடு ஸ்ரீராமசுவாமி கோயில், கடவல்லூர் ஸ்ரீராமசுவாமி கோயில், திருப்ரங்கோடு சிவன் கோயில் உள்ளிட்ட மற்ற ஏழு கோயில்களுக்கு மொத்தம் 4.5 கோடி ரூபாய் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. கருவறை மேற்கூரையைச் செப்புத் தகடுகளால் வேய்தல், கோயில் குளங்களைச் சீரமைத்தல் மற்றும் அன்னதானம் வழங்குதல் போன்ற பல்வேறு திருப்பணிகளுக்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அதிக ஆர்வம் கொண்ட ஆனந்த் அம்பானி, தனது ‘வான்டாரா’ திட்டத்தின் ஒரு பகுதியாகக் கோயில் யானைகளின் நலனில் கூடுதல் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. (Online Tamil News)


