தமிழக அரசியலில் முக்கிய திருப்பமாக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) இணைந்துள்ளது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்(TTV Dhinakaran) தனது கட்சியை அதிகாரப்பூர்வமாக பாஜக தலைமையிலான கூட்டணியில் இணைத்துக்கொண்டார். இது 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக–பாஜக கூட்டணிக்கு புதிய வலுவை அளிக்கும் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டணி முடிவை முன்னிட்டு, சென்னையில் உள்ள அமமுக தலைமையகத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். சட்டமன்றத் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் யுத்தி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து டிடிவி தினகரன் விரிவாக ஆலோசனை மேற்கொண்டார்.

ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “(ADMK)அதிமுக–பாஜக (BJP) கூட்டணியுடன் இணைந்து சட்டமன்றத் தேர்தலை சந்திக்க இருக்கிறோம். எங்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகளை தாண்டி, தமிழ்நாட்டின் நலன் முக்கியம் என்பதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதிமுகவுடன் நடப்பது பங்காளி சண்டைதான்; விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை” என்று தெரிவித்தார்.
மேலும் அவர், “ஜெயலலிதா ஆட்சியின் நல்லாட்சியை மீண்டும் தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் என்பதே எங்களின் இலக்கு. ‘இன்னா செய்தாரை ஒறுத்தல்’ என்ற வள்ளுவன் கூறிய நெறிப்படி, கடந்த காலத்தை மறந்து, மக்கள் விரும்பும் நல்லாட்சிக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளோம்” என்றார்.
இதனைத் தொடர்ந்து, சென்னை தனியார் விடுதியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை டிடிவி தினகரன் நேரில் சந்தித்து, கூட்டணி தொடர்பான இறுதி விவாதங்களை நடத்தினார். அமமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது குறித்த பேச்சுவார்த்தை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும், இன்று உடன்பாடு எட்டப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் தென் தமிழகத்தில் அமமுக பிரித்த வாக்குகள், அதிமுகவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டிருந்தனர். குறிப்பாக 52 தொகுதிகளில், பல இடங்களில் அமமுக–அதிமுக வாக்குகளை இணைத்திருந்தால், திமுக கூட்டணியை தோற்கடிக்க முடிந்திருக்கும் என்ற கணிப்பும் முன்வைக்கப்பட்டது. அந்த வகையில், டிடிவி தினகரனின் மீண்டும் இணைப்பு, 2026 தேர்தலில் தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு முக்கிய ஆதரவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் முயற்சியாக தேமுதிக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளை என்டிஏவில் இணைக்க பாஜக மேலிடம் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள மதுராந்தகம் பொதுக்கூட்டத்திற்கு முன், புதிய கட்சிகள் இணைப்பு குறித்து தெளிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், அமமுக இணைப்பை வரவேற்றுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ள அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை அன்புடன் வரவேற்கிறேன்” என்று சமூக வலைதளமான X-ல் பதிவு வெளியிட்டுள்ளார்.
அதற்கு, டிடிவி தினகரனும் “மக்கள் நலனை மையமாகக் கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை மனதார வரவேற்று வாழ்த்திய அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நல்லாட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் தமிழகத்தில் மீண்டும் அமைத்திட நாம் அனைவரும் ஒருங்கிணைந்து களப்பணியாற்றிடுவோம். இந்த அறிவிப்பு, கூட்டணிக்குள் அரசியல் ஒற்றுமை உருவாகும் எனும் சிக்னலாக பார்க்கப்படுகிறது. மேலும் அதிமுக-வில் கிளை காட்சிகள் இணையும் வாய்ப்புகள் உள்ளதையும் உறுதிப்படுகிறது.


