காங்கிரஸ் பெண் எம்.பிக்கள் பிரதமர் மோடியை தாக்க சதி செய்திருந்தனர். இதை தெரிந்துகொண்டு அவைக்கு களங்கம் ஏற்படாமல் இருக்க பிரதமர் மோடியை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டேன் என்று குற்றம் சாட்டி இருக்கிறார் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா. இடதுசாரி தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்து வருவதால் எதிர்க்கட்சிகள் எனக்கு சவக்குழு தோண்டப் பார்க்கின்றன என்று பிரதமர் மோடியும் குற்றம்சாட்டி இருக்கிறார்.
குற்றம்சாட்டவர்களின் ஒருவரான ஜோதிமணி எம்.பி. இதை மறுத்துள்ளார். ‘’மக்களவை சபாநாயகர் ஓம். பிர்லா குற்றச்சாட்டு அபத்தமானது. எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாதது.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இருதரப்பினரும் பேசவேண்டும். பிறகு பிரதமர் பதிலளிப்பார். இதுதான் வழக்கம். நடைமுறை. ஆனால் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பேச்சிற்குப் பயந்துகொண்டு அவரைப் பேசவிடாமல் பிரதமர், அமைச்சர்கள், சபாநாயகர் ஆகியோர் தடுத்தனர். நான்கு நாட்களாக எதிர்க்கட்சி தலைவர் மக்களவையில் பேச முடியவில்லை.
நேற்று ஒரு பாஜக எம்.பி யை முன்னாள் பிரதமர்களைப் பற்றி ஆபாசமாகவும், அறுவெறுப்பாகவும் பேச அனுமதிக்கின்றனர். இது குறித்து நாங்கள் சபாநாயகரைச் சந்தித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டோம். நடந்த மாபெரும் தவறை சபாநாயகர் மறுக்கவில்லை. போய்விட்டு நான்கு மணிக்கு வாருங்கள் என்று சொன்னார். நாங்கள்

மீண்டும் நான்கு மணிக்கு சென்றபோது” நான் அரசுக்குத் தெரியப்படுத்தியுள்ளேன். அவர்களிடம் இருந்து இதுவரை பதில் வரவில்லை” என்று சொல்கிறார். அப்படியென்றால் சபையை நடத்துவது யார்?
எதிர்கட்சியில் ஒருவர் கூட பேசாமல் , பேச அனுமதிக்கப்படாமல் பிரதமர் எப்படி குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசமுடியும்?
ஆளுங்கட்சியினரே பேசிக்கொள்வதற்கு இது ஒன்றும் பாஜகவின் கட்சி அலுவலகம் அல்ல. நாடாளுமன்றம். அங்கே எங்களுக்கும்- எதிர்க்கட்சியினருக்கும் பேசுவதற்கு உரிமை உள்ளது. அந்த உரிமைக்காகத்தான் நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்.
இதற்காக இந்தியா கூட்டணியின் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். நேற்றும், இன்றும் போராடினோம்..நாளையும் போராடுவோம்.

சீனா தாக்குதல், இந்தியா – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம், எப்ஸ்டீன் பைல் இவை குறித்த பயம் தான் பிரதமரை அவைக்கு வரவிடாமல் தடுத்தது. நாங்கள் அது தொடர்பான பதாகைகளை கையில் ஏந்தியிருந்தோம். உறுதியான போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தோம். பிரதமர் எங்களை எதிர்க்கட்சியினரை எதிர்கொள்ளப் பயந்துகொண்டு தான் அவைக்கு வரவில்லை.
இதை மறைக்க இப்பொழுது சபாநாயகரின் பின்னால் ஒளிந்துகொண்டு பெண் எம்.பிகள் மீது பழிபோடுவது வெட்கக் கேடானது. நாங்கள் அன்பையும், அமைதியையும், கண்ணியத்தையும் முன்னிறுத்துகிற காங்கிரஸ் கட்சியின் எம்.பிகள்.
பாஜகவைப் போல வன்முறை, கலவரத்தை நம்புகிறவர்கள் அல்ல. கோழைகள் தான் வன்முறையைக் கையில் எடுப்பார்கள். நாங்கள் வீர மங்கைகள். போராளிகள். உங்கள் கட்டுக் கதைகளுக்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். மக்களின் உரிமைகளுக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம். உங்கள் பொய்க்கதைகளால் எங்களை முடக்க முடியாது.’’



