கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (British Columbia) மாகாணம் டம்ளர் ரிட்ஜ் பகுதியில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் அரங்கேறிய துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 150ற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் அந்தப் பள்ளிக்குள் திடீரென புகுந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இந்த எதிர்பாராத தாக்குதலால் அதிர்ச்சியடைந்த மாணவர்களும் ஆசிரியர்களும் அலறியடித்துக் கொண்டு ஓடிய நிலையில், இந்த கோரத் தாக்குதலில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 25 பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து, காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பள்ளியில் சிக்கியிருந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஊழியர்களைப் பத்திரமாக மீட்டனர். இதற்கிடையில், தாக்குதல் நடத்திய நபர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், அந்த நபர் ஒரு பெண் என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்தப் பயங்கரச் சம்பவத்தில் மற்றொரு நபருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, பள்ளிக்கு அருகே உள்ள ஒரு வீட்டிலும் துப்பாக்கிச்சூடு நடந்ததாகக் கூறப்படுவதால், அதற்கும் இதற்கும் தொடர்பு இருக்குமா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.(Online Tamil News)


