கொரோனா எனும் கொடூரத்தில் உலகமே உறைந்து போயிருந்த 2020ஆம் ஆண்டு, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த அப்பா-மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் லாக்டவுன் கால விதிமுறைகளைக் காட்டி போலீசார் காவல்நிலையத்திற்கு வரச் செய்தனர். அதன்பிறகு அவர்கள் பிணமாகத்தான் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இரவு நேரத்தில் தந்தையையும் மகனையும் போலீசார் அடித்து துன்புறுத்தி, அதன்பிறகு சிறைக்கு அனுப்ப முயன்ற நிலையில், ரத்தம் சொட்டச் சொட்ட இருவரும் உயிருக்குப் போராடினர். அங்கிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சரியான சிகிச்சைக்கு கூட கொண்டு செல்ல முடியாத நிலையில், அடுத்தடுத்த நாட்கள் தந்தையும் மகனும் உயிரிழந்தனர்.
லாக்கப் டெத் எனப்படும் காவல் சித்திரவதையில் நேர்ந்த இந்த இரட்டைக் கொலை தமிழ்நாட்டையே அதிர வைத்தது. அப்பாவையும் மகனையும் ஸ்டேஷனில் வைத்து அடித்த போலீசார், அது தொடர்பான தடயங்களை அழிக்க முயற்சி செய்தது அம்பலமானது. நீதிமன்ற உத்தரவுப்படி மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் சாத்தான்குளம் காவல்நிலையத்திலும், கொல்லப்பட்டவர்களின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தினார். போலீஸ் அதிகாரிகளுக்கு பயந்து காவல்துறை தரப்பில் பலரும் பேசவே தயங்கிய நிலையில், பெண் காவலர் ரேவதி நடந்த உண்மைகளை மாஜிஸ்டிரேட்டிடம் கூறினார். காவல்நிலையத்தில் நடந்த தாக்குதலால்தான் மரணம் நிகழ்நந்திருக்கிறது என்று எல்லாருக்கும் வெட்டவெளிச்சமான நிலையில், அப்போது ஆட்சியிலிருந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு இந்தக் காவல் படுகொலைகளை மறைப்பதற்கு பெரும் பாடுபட்டது.
அப்பாவும் மகனும் நெஞ்சுவலியாலும் கடுமையானக் காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறலாலும் இறந்துவிட்டார்கள் என்று முதலமைச்சராக இருந்த பழனிசாமியும் அவருடைய அமைச்சர்களும் பேட்டி அளித்தார்கள். முதலமைச்சரின் நேரடிப் பொறுப்பில் இருந்த காவல்துறையில் நடந்த லாக்கப் கொலைகளுக்கு காரணமான போலீஸ் அதிகாரிகளைக் காப்பாற்றுவதற்கு அ.தி.மு.க. அரசு சட்டத்திற்கு புறம்பான பல முயற்சிகளை எடுத்தது. தி.முக. .உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், உள்ளூர் அமைப்பினரும் அ.தி.மு.க. அரசின் போக்கைக் கண்டித்து கண்டனங்களை எழுப்பியும், போராட்டங்களை நடத்தியும் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் வலியுறுத்தியதன் விளைவாக, எடப்பாடி பழனிசாமி அரசு இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது.
சாத்தான்குளத்தில் சட்டத்தைத் தன் கைகளில் எடுத்து அப்பாவையும் மகனையும் அடித்துக் கொன்ற போலீஸ் உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் ஆகியோரும் 2 காவலர்களும் கைது செய்யப்பட்டனர். கையில் சிக்கியிருக்கும் அப்பாவையும் மகனயும் அடித்துப் பழகும்படி இவர்களிடம் சொல்லி தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரன். சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார், இந்தக் கொடூர நிகழ்வுக்கு முன்பும் காவல் நிலையத்தில் பலரை சித்திரவதை செய்த விவரமும் தெரியவந்தது. அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரை புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் ஜெயராஜ்-பென்னிக்ஸ் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கலாம்.
சி.பி.ஐ. விசாரணையில் சாத்தான்குளம் போலீசார் கம்பு, கத்தி போன்றவற்றால் பென்னிக்ஸ், ஜெயராஜ் இருவரையும் கடுமையாகத் தாக்கியிருப்பது தெரியவந்தது. பிரேத பரிசோதனை அறிக்கையிலும் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிப்பட்டன. அவற்றை தீர்ப்பின் போது மாஜிஸ்ட்ரேட் முத்துக்குமரன் விரிவாக வாதித்தபோது அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியால் உறைந்தனர். ஏறத்தாழ 6 ஆண்டுகாலம் நடந்த வழக்கில் நீதிபதி முத்துக்குமரன் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தந்தை ஜெயராஜையும் மகன் பென்னிக்ஸையும் அடித்துக் கொன்ற வழக்கில் தொடர்பபுடைய 9 போலீசாரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தார் நீதிபதி முத்துக்குமரன். இந்தத் தீர்ப்பு நீதியின் மீதான நம்பிக்கையை நிலைநாட்டியுள்ளது. அதே நேரத்தில், ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை என்பது காவல்துறை நடவடிக்கைகளில் முற்றிலும் பொருத்தமாக உள்ளது.
தி.மு.க ஆட்சியிலும் காவல்துறையினரின் மோசமான நடவடிக்கைகளால் காவல் மரணங்கள் ஏற்பட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே சிவகங்கை மாவட்ட இளைஞர் அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் போனில் வருத்தம் தெரிவித்ததை தமிழ்நாடு பார்த்தது. அ.தி.மு.க. ஆட்சியைப் போல, சட்டத்தைக் கையில் எடுத்த போலீசாரை பாதுகாக்க தி.மு.க. ஆட்சியின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சிக்கவில்லை. துறை ரீதியான நடவடிக்கைகளுக்கும் சட்டப்பூர்வமான விசாரணைகளுக்கும் அவர் உத்தரவிட்டது நம்பிக்கையை உருவாக்கியது. எனினும், காவல்துறையின் தொடர்ச்சியான வன்முறைப் போக்கிற்கு இது மட்டும் தீர்வாகிவிடாது.
மற்ற குற்றங்களைவிட, காவல்துறையினர் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு உருவாக்கும் மரணங்களுக்கும், அத்துமீறல்களுக்கும் விரைவான விசாரணையும் கடுமையான தண்டனையும் அளிக்கப்பட்டால்தான் காவல்நிலையக் கொலைகள் முடிவுக்கு வரும்.(Online Tamil News)



