போலீஸ் காவலில் சாத்தான்குளம் தந்தை – மகன் அடித்துக்கொல்லப்பட்ட 9 போலீசாருக்கும் இரட்டை தூக்கு தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது. ஏன் இரட்டை தூக்கு தண்டனை?
தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் பென்னிக்ஸ். இவர்கள் சாத்தான்குளம் பஜாரில் செல்போன் கடை வைத்திருந்தனர். கடந்த 2020ல் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தது.

ஊரடங்கின் போது காவல்துறை அனுமதி அளித்திருந்த நேரத்திற்கு மேல் கடை திறந்திருந்ததாக சொல்லி போலீசார் சத்தம் போட, பதிலுக்கு பென்னிக்ஸும் சத்தம் போட இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் தடித்தது. இலவசமாக போலீசார் செல்போன் கேட்டனர். அதை தராததால் வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது.
இதையடுத்து ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் காவல்நிலையம் அழைத்துச் சென்று விடிய விடிய கம்பு, கம்பியால்அடித்து சித்திரவதை செய்ததில் தந்தை – மகன் இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலகத்தையே உலுக்கி எடுத்தது. ஐநாவிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தது.

நடந்தது லாக் அப் மரணம் இல்லை என்று அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை விட்டார். அப்போதைய அமைச்சர் கடம்பூர் ராஜூவும், நடந்தது லாக் அப் மரணம் இல்லை என்று சொன்னார்.
கைகளை கட்டி தொங்கவிட்டு, அடித்ததும், மேசையில் படுக்க வைத்து அடித்ததும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. நாம் அடித்து பழகுவதற்கு அப்பா, மகன் கிடைச்சிருக்காங்க என்று ஆய்வாளர் ஸ்ரீதர் சொன்னதன் பேரிலேயே தாக்குதல் நடந்திருக்கிறது. விவகாரம் பெரிதானதால் சிபிசிஐ இந்த வழக்கை விசாரித்தது. பின்னர் இது சிபிஐ விசாரணைக்கு மாறியது.
சம்பவத்தின் போது பணியில் இருந்த பெண் காவலர் ரேவதி அளித்த நேரடி சாட்சியம் இந்த வழக்கில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியது. இதன் பின்னர்தான் ஜெயராஜ் – பென்னிக்ஸ் இருவரும் லாக் அப் மரணம்தான் என்பது உறுதியானது. இந்த குற்றத்தில் 10 காவலாளிகள் மீது வழக்கு பதிவானது. அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களின் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார்.
கொரோனா லாக் டவுன் காலத்தில் சாத்தான்குளத்தில் நடந்த லாக் அப் கொடூர மரணங்கள் ஐநாவையே உலுக்கி எடுத்தது. ஐநாவும் முன்வந்து கண்டனம் தெரிவித்தது.
இந்த வழக்கின் விசாரணை முடிந்து 6 ஆண்டுகளுக்கு பின்னர் 9 காவலாளிகளும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்த மதுரை மாவட்ட நீதிமன்றம், இன்று 9 பேருக்கும் தண்டனை அறிவித்துள்ளது. 9 பேருக்கும் இரட்டை தூக்கு தண்டனை அறிவித்துள்ளது நீதிமன்றம்.
இரட்டை தூக்கு ஏன்?
குற்றத்தின் கொடூரத்தன்மை அதிகமாக இருக்கிறது என்பதை உணர்த்தவே மிகக் கடுமையான சட்டப்பூர்வ தண்டனை அளிக்க, இரட்டை தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. தண்டனை குறைப்பு நடவடிக்கைகளை தவிர்க்கவும் இது மாதிரி இரட்டை தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. ஒரு முறை தூக்கிலிட்டாலும் இரண்டு முறை தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவே ஆவணங்களில் பதிவ கும்.
சத்தான்குளம் வழக்கில் 9 பேருக்கும் இரட்டை தூக்கு என்பது, தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவர் கொலைக்கும் தனித்தனியே தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.



