தென் சீனக் கடல் பகுதியில், வெளியில் அமைதியாகத் தெரியும் கடலுக்குள் 301 மீட்டருக்கும் அதிக ஆழத்தில் ஒரு அதிசயமான நீர்ப்பள்ளம் உள்ளது. இதற்கே ‘டிராகன் ஹோல்’ என்று பெயர். அதிகாரப்பூர்வமாக இதை Sansha Yongle Blue Hole என்றும் அழைக்கிறார்கள்.
இந்த பள்ளம் நேராக கீழே செல்லும் குழி அல்ல. அது வளைந்து, சுருண்டு, பக்கவாட்டிலும் நீள்கிறது. நுழைவுப் பகுதி அகலமாக இருந்தாலும், ஆழம் செல்லச் செல்ல இடம் குறுகியும் விரிவாகவும் மாறுகிறது. இதனால் இதன் உருவாக்கம் பல ஆயிரம் ஆண்டுகளாக மெதுவாக நடந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
கடல் மட்டம் குறைந்த பனிக்காலங்களில் (Ice Age) இந்த பள்ளம் மேலும் விரிந்திருக்கலாம். இதன் உள்ளே பெரும்பாலும் பாற்கல் (Reef limestone) சுவர்கள் காணப்படுகின்றன. சில இடங்களில் திடீரென பக்க குகைகளும் தோன்றுகின்றன.

ரோபோட் ஆய்வு & அளவீட்டு சவால்கள்
முதலில் இந்த பள்ளத்தின் ஆழத்தை அளவிடுவது விஞ்ஞானிகளுக்கு கடினமாக இருந்தது. சுருண்ட சுவர்கள் காரணமாக கருவிகள் வழிதவறின.
2017-ம் ஆண்டு, உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய நீருக்கடிப் ரோபோட்டை பயன்படுத்தி முழுமையான 3D வரைபடம் தயாரிக்கப்பட்டது. இதன் ஆழம் 301.19 மீட்டர் என உறுதி செய்யப்பட்டது.
முன்பு உலகின் மிக ஆழமான Blue Hole என்ற பெயர் இதற்கே இருந்தது. தற்போது அந்த சாதனைமெக்சிகோ-வில் உள்ள மற்றொரு இடத்துக்கு சென்றாலும், டிராகன் ஹோல் மீதான ஆர்வம் குறையவில்லை.

90 மீட்டருக்குக் கீழே ஆக்சிஜன் இல்லை!
இந்த பள்ளத்தில் 90 மீட்டருக்குக் கீழே சென்றவுடன் ஆக்சிஜன் வேகமாக குறைகிறது.
அதற்கு மேலே சில உயிரினங்கள் வாழ முடிந்தாலும், அதற்குக் கீழே சூழல் மிகவும் கடுமையாக மாறுகிறது.
ஆழத்தில் ஹைட்ரஜன் சல்பைடு போன்ற விஷ வாயுக்கள் காணப்படுகின்றன. நீர் சுழற்சி மிகவும் குறைவாக இருப்பதால், ஒருமுறை ஆக்சிஜன் குறைந்தால் அது மீண்டும் நிரம்பாது. இதனால் நீர் அடுக்குகள் மாறாத நிலையில் (Stable layers) இருக்கின்றன.

இயற்கையின் ‘டைம் காப்ஸ்யூல்’
இந்த தனிமைப்படுத்தப்பட்ட சூழல் விஞ்ஞானிகளுக்கு ஒரு பொக்கிஷம்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய கடல் நிலை, காலநிலை மாற்றங்கள், பண்டைய உயிரினங்களின் சான்றுகள் இங்கு பாதுகாக்கப்பட்டுள்ளன.
பாறைகளில் உறைந்த பவளத் துண்டுகள், பழமையான சிப்பிகள் போன்றவை இதற்குச் சாட்சி. இப்போது விஞ்ஞானிகள் டிராகன் ஹோலை வெறும் ஆழமான பள்ளமாக அல்ல, பூமியின் வரலாற்றை சேமித்து வைத்துள்ள இயற்கை காப்பகமாக பார்க்கிறார்கள்.


