ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன் மற்றும் அக்ஷய் கண்ணா நடிப்பில் வெளியான ‘துரந்தர்’ (முதல் பாகம்), வசூலில் ₹1350 கோடிக்கும் மேல் ஈட்டிப் பெரும் சாதனை படைத்தாலும், பலத்த சர்ச்சைகளைச் சந்தித்தது.

இந்தப் படம் பாகிஸ்தான் மற்றும் பயங்கரவாதத்தை மையமாகக் கொண்டதால், இது ஒரு Propaganda Film என்றும், மதப் பிரிவினையைத் தூண்டுவதாகவும் ஒரு தரப்பினர் விமர்சித்தனர். குறிப்பாக, அசோக சக்ரா விருது பெற்ற மறைந்த மேஜர் மோஹித் சர்மாவின் வாழ்க்கையை அனுமதியின்றிப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு நீதிமன்றம் வரை சென்றது.

மேலும், கராச்சியில் உள்ள லயாரி (Lyari) பகுதியைத் தவறாகச் சித்தரித்ததாக எதிர்ப்புகள் எழுந்தன. இத்தனை சர்ச்சைகள் மற்றும் ‘A’ சான்றிதழ் பெற்ற அதீத வன்முறை இருந்தபோதிலும், படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் அக்ஷய் கண்ணா, ரன்வீர் சிங்கின் மிரட்டலான நடிப்பு ஆகியவற்றால் இது பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது.

இந்நிலையில், இன்று (மார்ச் 19, 2026) வெளியாகியுள்ள ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ திரைப்படம் வசூலில் பிரம்மாண்ட சாதனையைப் படைத்து வருகிறது. குறிப்பாக, ரிலீசுக்கு முன்பே பிரீமியர் காட்சிகளின் மூலம் உலகளவில் சுமார் ₹52.71 கோடி வசூலித்துள்ளது.

இன்று வெளியான முதல் காட்சியில் மட்டும் சுமார் ₹17.07 கோடி ஈட்டியுள்ள நிலையில், படத்தின் முதல் நாள் மொத்த வசூல் நிச்சயம் ₹100 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் ஒரு குறிப்பிட்ட தரப்பினரைத் தவறாகச் சித்தரிப்பதாக விமர்சனங்கள் எழுந்தபோதிலும், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. எனினும், தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழில் இந்தப் படம் வெளியாவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டதால் சில காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.(Online Tamil News)


