எல்லாத்தையும் மேல இருக்குறவனே பார்த்துக்குவான்னு சொன்னா எப்படி? கீழ இருக்குறவனுக்கு எதையாவது ஒப்படைங்கடாங்கிற கவுண்டமனி காமெடி மாதிரி, அதிமுக கூட்டணி விவகாரம், தொகுதிப்பங்கீடு உள்ளிட்ட எல்லாவறையும் பாஜக டெல்லி மேலிடம் கவனித்துக்கொண்டாலும், யாருக்கு எத்தனை சீட்? யாருக்கு எந்தெந்த தொகுதிகள்? என்கிற விபரத்தை அறிவிக்கும் வாய்ப்பையாவது பெற்றார் எடப்பாடி பழனிசாமி.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11, தமாகாவுக்கு 5, ஐஜேகேவுக்கு 2, புரட்சி பாரதத்திற்கு 1, தமமுகவுக்கு 1 என்று அறிவித்த பழனிசாமி, இத்தனை இடங்கள் போக மீதமிருக்கும் இடங்களில் அதிமுக போட்டியிடுகிறது என்று அறிவித்தார். பல கட்டமாக டெல்லி சென்று அங்கே முட்டிமோதி பலரும் தொகுதிப்பங்கீடு செய்து கொண்டு முடிவானதைத்தான் அறிவித்தார். ஆனால், திமுகவில் தொகுதிப்பங்கீடு இழுபறியில் இருக்கிறது. அதிமுக கூட்டணியில் ஒரே நாளில் தொகுதிப்பங்கீடு முடிந்துவிட்டது பாருங்கள் என்று சிரித்தார். உண்மை அதுவல்ல என்பதால் அவரது கட்சியினரே அந்த சிரிப்பை ரசித்திருக்க மாட்டார்கள். டெல்லி தலைமை கொடுத்த பிரிண்ட் சீட்டை பார்த்து படிப்பதற்கு ஒரு நாள் என்ன ஒரு சில நிமிடங்களே போதும் என்று வந்த விமர்சனங்களை எல்லாம் அவர்கள் கவனித்திருப்பார்கள்தானே?

தொகுதிப்பங்கீட்டை அறிவித்த கையோடு கூட்டணிக்கட்சிகளின் தொகுதிகளையும் அறிவித்துவிட்டார் பழனிசாமி. அதனால்தான் தேர்தல் களத்தில் அதிமுக முந்திச்செல்கிறது என்கிற கருத்தை பதிவு செய்கின்றன ஊடகங்கள்.
’’175 தொகுதிகளில் உதயசூரியன் களம் காண்கிறது’’ என்று அழுத்தம் திருத்தமாக சொல்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இதைப்போல் நெஞ்சை நிமிர்த்தி பழனிசாமி சொல்லாமல் கூட்டிக்கழித்துப் பார்க்கச் சொன்னதற்கு காரணமிருக்கிறது. திமுக கூட்டணியில் தனிச்சின்னம் இல்லாத கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன. அதிமுக கூட்டணியில், தனிச்சின்னம் இல்லாத கட்சிகள் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றன.
ஒருவேளை அதிமுக கூட்டணி தேர்தலில் வென்றால் அதிமுகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் பாஜக என்ன செய்யும்? பிற மாநிலங்களில் செய்ததைப் போன்றே தமிழகத்திலும் செய்யுமா? என்கிற கேள்வி இருக்கிறது. இதன் காரணமாக எழுந்த அச்சத்தில்தான் நீங்களே கூட்டிக்கழித்துப் பாருங்கள் என்கிறார் பழனிசாமி.

வெற்றி மேல் நம்பிக்கை இருந்ததால்தான் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக அமைச்சர்கள் போட்டியிட்ட தொகுதிகள் திமுக எதிர்த்து களம் கண்டு வென்றது. திமுக வேட்பாளர் ஐ டிரீம்ஸ் மூர்த்தி, ஜெயகுமாரை வீழ்த்தினார். கரூர் தொகுதியில் செந்தில் பாலாஜியிடம், அப்போதைய சிட்டிங் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தோல்வியடைந்தார். கடலூர் தொகுதியில் அப்போது அமைச்சராக இருந்த எம்.சி சம்பத் தோல்வியடைந்தார். இதேபோன்று ராஜேந்திரபாலாஜி, கே.சி வீரமணி, வெல்லமண்டி நடராஜன், பெஞ்சமின் உள்ளிட்ட 11 அமைச்சர்கள் தோல்வியடைந்தனர்.
2026 தேர்தலிலும் அதிமுகவுக்கு அந்த தோல்வி பயம் இருக்கிறதா என்ன? ரொம்ப சாதுர்யமாக செயல்பட்டு திமுக அமைச்சர்கள் தொகுதிகளை எல்லாம் பாமக, அமமுக, தமாகா என்று கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கி இருக்கிறதா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

அமைச்சர் கே.என்.நேருவின் திருச்சி மேற்கு தொகுதில் அமமுகவையும், அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரின் குன்னம் தொகுதியில் ஐ.ஜே.கே.வையும், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் திருச்செந்தூர் தொகுதில் பாஜகவையும், அமைச்சர் ஆர்.ராஜேந்திரனின் சேலம் வடக்கு தொகுதியில் பாமகவையும், அமைச்சர் ஆர்.காந்தியின் ராணிப்பேட்டை தொகுதில் தமாகாவையும், அமைச்சர் மா.சுப்பிரமணியத்தின் சைதாப்பேட்டை தொகுதில் அமமுகவையும், அமைச்சர் நாசரின் ஆவடி தொகுதியில் பாஜகவையும், அமைச்சர் முத்துசாமியின் ஈரோடு மேற்கு தொகுதியில் தமாகாவையும், அமைச்சர் மதிவேந்தனின் ராசிபுரம் தொகுதியில் தமாகாவையும், அமைச்சர் எ.வ.வேலுவின் திருவண்ணாமலை தொகுதியில் பாஜகவையும், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் மன்னார்குடி தொகுதியில் அமமுகவையும், அமைச்சர் சக்கரபாணியின் ஒட்டன்சத்திரம் தொகுதியில் தமாகாவையும், அமைச்சர் பெரியகருப்பனின் திருப்பத்தூர் தொகுதியில் பாஜகவையும், சபாநாயகர் அப்பாவுவின் ராதாபுரம் தொகுதியில் பாஜகவையும் களமிறக்கி இருக்கிறது அதிமுக. காரைக்குடியில் கூட நட்சத்திர போட்டியாளர் சீமானை எதிர்த்து களமிறங்காமல் அமுமுகவை அங்கே களமிறக்குகிறது அதிமுக. மன்னார்குடியில் மூன்று முறை அதிமுக தோல்வியடைந்திருப்பதால் இந்த முறை அமமுகவுக்கு அந்த தோல்வி முகமூடியை கொடுத்திருக்கிறது அதிமுக.

அதிமுக சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்களின் பட்டியலின்படி முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மூன்று பேர் தொகுதி மாறி களமிறங்குகிறார்கள். 2021 சட்டமன்ற தேர்தலில் விழுப்புரத்தில் போட்டியிட்ட சி.வி.சண்முகம் மயிலம் தொகுதியிலும், ராஜபாளையத்தில் போட்டியிட்ட ராஜேந்திரபாலாஜி சிவகாசி தொகுதியிலும், போளூர் தொகுதியில் போட்டியிட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்தி கலசபாக்கம் தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
பதினான்கு அமைச்சர்களின் தொகுதிகளில் எதிர்க்கட்சியான அதிமுக எதிர்த்து களமிறங்காமல் கூட்டணிக்கட்சிகளை களமிறக்குவதும், மூன்று முன்னாள் அமைச்சர்கள் தொகுதி மாறுவதும் எடப்பாடி பழனிசாமியின் சாதுர்யம், தேர்தல் வியூகம் என்று ஒரு தரப்பினர் சொன்னாலும் கூட, இது அதிமுகவுக்கு ஏற்பட்ட அச்சத்தின் காரணமாக இருக்குமோ? என்கிற விமர்சனமும் எழத்தான் செய்கிறது.



