விசிக தலைவர் திருமாவளவன் எடுத்த முடிவைப் போன்று தவெக தலைவர் விஜய் எடுத்தால்தான் தவெக காப்பாற்றப்படும் என்கிறார் அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி.
ரஜினி கட்சி தொடங்கியபோது அவரை திமுக மிரட்டியதாக தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா சொன்னது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டம் தெரிவித்து வந்தனர். ஆனாலும் ஆதவ் அர்ஜூனா வருத்தம் தெரிவிக்காத நிலையில், தனக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்களுக்கு நன்றி சொன்ன ரஜினிகாந்த், ’’காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்’’ என்று ஆதவ் அர்ஜூனா விவகாரத்தினை கண்டித்திருக்கிறார். இதன் பின்னரும் ஆதவ் வருத்தம் தெரிவிக்கவில்லை.
இது குறித்து அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி, ‘’ஆதவ் அர்ஜுனாவின் ரஜினிகாந்த் குறித்த அவதூறான கருத்துக்கு எழுந்திருக்கிற எதிர்ப்பும், அதற்கு ரஜினிகாந்த் ஆதவ் அர்ஜுனாவை கண்டித்து “காலம் பேசாது காத்திருந்து பதில் சொல்லும்” என்கிற கருத்து மூலம் தேர்தலில் நிச்சயம் தவெக தொண்டர்களுக்கு எதிராக ரஜினியும் அவரது ரசிகர்கள் இயங்குவார்கள். அது விஜயின் வாக்கு வங்கியை சிதைக்கும், பொதுமக்களிடமும் ஒரு தாக்கத்தை உண்டாக்கும்.

விஜய் எல்லா காலகட்டத்திலும் அமைதியாக மௌனம் காப்பது தவறு, குறைந்தபட்சம் ஆதவ் அர்ஜுனாவை கண்டித்து விஜய் கருத்து தெரிவித்திருக்க வேண்டும். ரஜினிகாந்த்தை தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும்.
தற்பொழுது ஆதவ் அர்ஜுனா ” மாற்றுக் கட்சியினர் யாராவது நம்மை தாக்கினால் திருப்பி அடிக்க வேண்டாம், நம்மை அடிக்க அடிக்க அதுதான் நமக்கு பலமாக மாறும், எந்த பிரச்சினையாக இருந்தாலும் நம்ம அதை சட்டரீதியாக சந்திப்போம் வெற்றி நிச்சயம்” என்கிறார்.
ரஜினிகாந்த் கருத்துக்கு பிறகு ஆதவ் அர்ஜுனாவின் இந்த கருத்துக்கள். அவர் இன்னும் திருந்தவில்லை, இனி திருந்தவும் மாட்டார் என்பதை தான் காட்டுகிறது. திருமாவளவனை போல விஜயும் ஒரு முடிவெடுத்தால் தான் அவரது கட்சி காப்பாற்றப்படும்.’’



