கடந்த சில நாட்களாக இந்திய பங்குச்சந்தை கடும் சரிவைச் சந்தித்து வந்த நிலையில், இன்று மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் நல்ல ஏற்றம் கண்டுள்ளன. குறிப்பாக நேற்று, கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய வீழ்ச்சியை இந்திய சந்தை சந்தித்திருந்தது முதலீட்டாளர்களைக் கவலையில் ஆழ்த்தியது.

ஆனால், இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 639 புள்ளிகள் உயர்ந்து 78,205 என்ற நிலையை எட்டியது. அதேபோல் நிஃப்டி சுமார் 233 புள்ளிகள் வரை உயர்ந்து 24,261 புள்ளிகள் என்ற நிலைக்குச் சென்றது. இந்தத் திடீர் ஏற்றம் காரணமாக முதலீட்டாளர்கள் தற்போது நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
உலகளாவிய சூழலைப் பொறுத்தவரை, ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் மோதல் போக்கு உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பதற்றமான சூழலே கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை கடும் சரிவைச் சந்திக்க முக்கியக் காரணமாக அமைந்தது. இருப்பினும், இன்றைய தினத்தில் ஜப்பான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட பெரும்பாலான ஆசிய நாடுகளின் பங்குச்சந்தைகளும் ஓரளவு உயர்வைச் சந்தித்தது இந்திய சந்தையிலும் எதிரொலித்தது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் காரணமாக சந்தையில் இன்னும் சில காலத்திற்கு ஏற்ற இறக்கங்கள் தொடர வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.(Online Tamil News)


