தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென்று மாற்றப்பட்டு மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக மேற்கு வங்க ஆளுநராக இருந்த சி.வி.ஆனந்தபோஸ் திடீரென்று ராஜினாமா செய்யப்பட்டுள்ளார். தன்னிடம் கலந்தாலோசிக்காமல் ஆளுநர் மாற்றப்பட்டுள்ளார் என்று வெகுண்டெழுந்திருக்கிறார் மேற்கு வங்க ஆளுநர். ஏன் இந்த மாற்றம் என்று அவர் சந்தேகத்தை எழுப்பி இருக்கிறார்.
இது ஒரு புறமிருக்க, ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த திடீர் மாற்றத்தின் பின்னணியில் ஊழல் உள்ளதா? என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் சர்வதேச நகரத்தில், நிலப் பரிமாற்றம் என்ற பெயரில் சுமார் ₹350 கோடி ஊழல் நடந்துள்ளதாக அம்மாவட்ட எஸ்பியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆரோவில் பவுண்டேஷன் தலைவராக உள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் செயலாளர் பதவியில் உள்ள குஜராத் கேடர் ஐஏஎஸ் அதிகாரி ஜெயந்தி ஆகியோர் மீது இந்த புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் அருண்அம்பதி, சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ், பிரபு மற்றும் பாலமுருகன் ஆகியோர் இந்தப் புகாரை அளித்துள்ளனர்.
ஆரோவில்லுக்குச் சொந்தமான 3,300 ஏக்கர் நிலத்தில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களைத் தனியாருக்குக் குறைந்த விலைக்கு விற்றுவிட்டு, அதற்குப் பதிலாக ஒதுக்குப்புறமான நிலங்களை மாற்றாகப் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, தற்போது புகாரில் கூறப்பட்டுள்ள 16 ஏக்கர் நிலப் பரிமாற்றத்தில் அரசுக்கு மிகப் பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த 16 ஏக்கரில் ஒரு பகுதியை அதிமுகவைச் சேர்ந்த ஒருவருக்கு 10 ஏக்கர் எனவும், மற்றவர்களுக்குச் சில ஏக்கர் எனவும் பிரித்து விற்பனை செய்துள்ளதாகப் புகார்தாரர்கள் தெரிவித்துள்ளனர்.

சந்தை விலையைச் சரியாக நிர்ணயம் செய்யாததால், ஆரோவில் பவுண்டேஷனுக்கும் தமிழக அரசுக்கும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
2021-ல் இவர்கள் பதவியேற்ற பிறகு, ஆரோவில் வளர்ச்சிக்கு ஏதும் செய்யாமல், நிலங்களை விற்பனை செய்வதிலேயே ஆர்வம் காட்டுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த ஊழல் குறித்துக் கேள்வி கேட்பவர்களின் வீட்டில் இணையதளத் (Internet) துண்டிப்பு போன்ற சித்திரவதைகள் செய்யப்படுவதாக மேஜர் அருண்அம்பதி கூறியுள்ளார்.
இந்தப் புகார் குறித்து 6 நாட்களில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக எஸ்பி உறுதியளித்துள்ளார். நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.



