உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் (Kanpur) உள்ள விஐபி சாலையில் அதிவேகமாக வந்த லம்போகினி கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து நடைபாதையில் புகுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 6 பேர் படுகாயமடைந்தனர்.

இதனையடுத்து, காரை ஓட்டி வந்தது அந்த மாநிலத்தின் பிரபல புகையிலை தொழிலதிபர் ஏ.கே. மிஸ்ராவின் மகன் சிவம் மிஸ்ரா (Shivam Mishra) என்பது தெரியவந்தது. மேலும், விபத்து நடந்த நேரத்தில் அவர் போதையில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் அவரைப் பிடித்துத் தாக்கினர். ஆனால், இந்த விவகாரத்தில் காவல்துறையினர் சிவம் மிஸ்ராவைக் காப்பாற்ற முயற்சிப்பதாகப் பாதிக்கப்பட்டவர்களும் பொதுமக்களும் அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்து வருகின்றனர்.
குறிப்பாக, காவல்துறையினர் முதலில் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் (FIR) விபத்தை ஏற்படுத்தியவரின் பெயர் குறிப்பிடப்படாமல், ‘யார் என்று தெரியாத ஓட்டுநர்’ என்றே பதிவாகியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த விபத்துக்குள்ளான சொகுசு காரைத் துணியால் மூடி மறைத்ததும், பாதிக்கப்பட்டவர்கள் அது குறித்துக் கேள்வி கேட்டபோது போலீஸ் நிலையத்தில் இருந்த பவுன்சர்கள் அவர்களைத் தடுத்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, தற்போது சிவம் மிஸ்ராவின் பெயர் FIR-இல் சேர்க்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், விபத்தின்போது தனக்குத் திடீரென வலிப்பு ஏற்பட்டதாலேயே கார் கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறி சிவம் மிஸ்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், இது சட்டத்திலிருந்து தப்பிப்பதற்காகச் சொல்லப்படும் மருத்துவக் காரணம் எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.(Online Tamil News)


