சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மாற்றம் மற்றும் அந்நியச் செலாவணி மதிப்பைக் கணக்கில்கொண்டு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மார்ச் 7-ஆம் தேதி முதல் வீட்டு உபயோக மற்றும் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளன.
அதன்படி, தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.115 உயர்ந்து, புதிய விலையாக ரூ.2,043.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது கடந்த ஜூன் மாதத்திற்குப் பிறகு வணிக சிலிண்டர் விலை எட்டியுள்ள புதிய உச்சமாகும்.
அதேபோல், கடந்த ஏப்ரல் மாதம் முதல் விலையில் மாற்றமின்றி விற்பனையாகி வந்த 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலையும் தற்போது ரூ.60 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.853-லிருந்து ரூ.928.50 ஆக அதிகரித்துள்ளது.
இந்த புதிய விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், டெல்லியில் ரூ.913-க்கும், மும்பையில் ரூ.912.50-க்கும் வீட்டு உபயோக சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. நாட்டில் போதுமான எரிபொருள் இருப்பு உள்ளதாக மத்திய அரசு உறுதியளித்த போதிலும், இந்த திடீர் விலை உயர்வு உணவகங்கள், சிறு வணிக நிறுவனங்கள் மற்றும் சாமானிய மக்களைப் பெரிதும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.(Online Tamil News)


