மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் பன்னீர்செல்வம். அவர் இன்றைக்கு தன்னை விட வயதில் சிறியவரான பழனிசாமியை, ‘’அருமை அண்ணன்’’ என்று சொல்லும் நிலையைப் பார்த்து, இந்த அளவிற்கு தன்மானத்தை இழக்க வேண்டுமா? என்று பலரும் கேட்கின்றனர்.
இந்த அளவுக்கு தன்மானத்தை இழந்து அப்படி என்ன கிடைத்துவிடப் போகிறது? என்றும் கேட்கிறார்கள்.

இன்றைக்கு பழனிசாமியுடன் இருப்பவர்கள் எல்லோரும் தர்ம யுத்தத்தின் போது பன்னீர்செல்வத்துடன் இருந்தவர்கள். அன்றைக்கு மட்டும் பன்னீர்செல்வம் தனிக்கட்சி தொடங்கி இருந்தால் இன்றைக்கு அரசியலில் அவரின் செல்வாக்கு என்பது வேற லெவலில் இருந்திருக்கும். என்.டி.ஏ. இவருடன் தானாக வந்து கூட்டணி பேச்சு நடத்தி இருக்கும். அதைவிட்டுவிட்டு இப்படி தன்மானத்தை இழந்து நிற்க வேண்டுமா? என்ற கேள்வி எழுந்திருப்பது போலவே, அப்படியே அதிமுகவில் சேர்த்துக் கொள்ளச் சொல்லி கேட்டாலும் நேரடியாக கேட்க வேண்டியதுதானே? அது ஏன் டிடிவி தினகரன் பக்கம் திருப்பி விடுகிறார்? என்ற கேள்வியையும் எழுப்பி வருகிறார்கள்.
இதே கேள்வியைத்தான் இன்றைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜுவும் கேட்டிருக்கிறார்.
’’ஓபிஎஸ் நடத்துவது நாடகம். மக்கள் இதைப் பார்த்து பார்த்து சலித்துப் போய்விட்டார்கள். அவர் நேரடியாக கேட்காமல் இன்னொருவர் வாயிலாக கேட்பதா? இப்படித்தான் ஊடகம் வழியாகவே பேசிப்பேசி இந்த நிலைமைக்கு ஆளாகி நிற்கிறார்’’ என்று கடுமையாக விளாசினார்.



