சங்கீதா விவாகரத்து கேட்டிருக்கும் நேரத்தில், விஜய் – த்ரிஷா இருவரும் பொதுவெளியில் ஜோடியாக வலம் வந்தது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நேரத்தில் இது தேவையா? என்று பலரும் கேள்வி எழுப்பும் சூழலில், தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் பார்த்திபனிடம் கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதிலுக்கு த்ரிஷா கண்டனம் தெரிவிக்க பார்த்திபன் உடனே அது விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

’’சில நேரங்களில் சில தவறுகள் நோக்கமின்றி அரங்கேறிவிடுகின்றன. கலாட்டா விருது விழாவில் கேட்கப்பட்ட 20 கேள்விகளுக்கும் சற்றும் யோசிக்காமல் டான் டான் என்று பதில் சொல்லிக் கொண்டிருக்கையில், த்ரிஷாவின் போட்டோ திரையில் வந்ததும், என்ன சொல்வது என யோசிக்கையில், குந்தவை குந்தவை என குரல் எழுப்பினர். உடனே வார்த்தை ஜாலமாக மட்டுமே, ’’குந்தவையை வீட்டிலேயே குந்த வைக்கவும். பிரச்சனை வராமல் இருக்க. எனக்கூற அரங்கமே கை தட்டியது. அதில் பெரும்பாலும் விஜய் ரசிகர்கள்.
மேடையை விட்டு இறங்கி வந்ததும் நண்பர் ரங்கராஜ் பாண்டே, குந்தவையை தவிர்த்திருக்கலாம் என்று சொன்னார். உடனே நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம் அதை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன். ஆனால் யாரோ எடுத்த வீடியோ மூலம் அது வெளியாகி சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை உணர்ந்து அதற்காக நானும் என் வருத்தத்தை மனப்பூர்வமாக தெரிவித்துக்கொள்கிறேன்.

பிரச்சனைகள் பெரிதாவதை என்றுமே நான் விரும்புவதில்லை.
நான் கல்லூரிகளுக்கு செல்லும் போது கூட பெண் சுதந்திரம் பற்றியே பேசுகிறேன். ஆண்- பெண் பாகுபாடு ஏதுமின்றி அனைவரும் தேவையற்ற கட்டுப்பாடுகளை விவாகரத்து செய்துவிட்டு சுதந்திரத்தை கைபிடித்து சந்தோசமாக வாழவேண்டும் என்று நினைப்பவன் நான். பெண்ணே இப்பிரபஞ்சத்தின் ஆகப்பெரும் ஆக்கசக்தி. ’’
வீடியோவுடன், ‘’எது நடந்ததோ அது தவறாகவே நடந்துள்ளது. இதில், வருந்துவதைத் தவிர வேறு வழியில்லை !’’இந்த வாசகங்களையும் குறிப்பிட்டுள்ளார்.



