ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் உள்ள பிவாடி (Bhiwadi) தொழில்துறை பகுதியில் இயங்கி வந்த தனியார் ரசாயனத் தொழிற்சாலையில் இன்று காலை ஒரு கோர விபத்து நிகழ்ந்தது.

பிவாடியின் குஷ்கேரா-கரோலி (Khushkheda-Karoli) பகுதியில் அமைந்துள்ள இந்தத் தொழிற்சாலையில் காலை திடீரெனத் தீப்பிடித்தது. தொடர்ந்து, தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த ரசாயனப் பொருட்கள் மற்றும் பேரல்கள் வெடித்துச் சிதறியதால், தீ மிகக் குறுகிய நேரத்தில் கட்டிடம் முழுவதும் பரவியது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
7 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழப்பு
மேலும், விபத்து நடந்த சமயத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழிற்சாலையின் உள்ளே பணியில் இருந்துள்ளனர். தொடர்ந்து, தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் பலரால் வெளியேற முடியாமல் போனது. மேலும், தீயணைப்புத் துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட தேடுதலில், இதுவரை 7 தொழிலாளர்கள் உடல் கருகிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், சிலர் உள்ளே சிக்கியிருக்கலாம் என்ற அச்சத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றது.
அரசு விசாரணை மற்றும் நிவாரணம்
இந்த விபத்து குறித்துக் கூடுதல் மாவட்ட ஆட்சியர் சுமிதா மிஸ்ரா தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது. தொழிற்சாலையில் முறையான தீயணைப்புப் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பது குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மா ஆகியோர் இந்த உயிரிழப்புகளுக்குத் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தகுந்த நிவாரணம் மற்றும் உதவிகளை வழங்க அம்மாநில முதலமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.(Online Tamil News)


