மேற்கு வங்காளத்தில் நடைபெற்று வரும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் (Special Intensive Revision) கடுமையான முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள் நடந்ததாகக் கண்டறியப்பட்டதை அடுத்து, இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, கடமை தவறிய மற்றும் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை மீறிய 7 உதவி தேர்தல் பதிவு அதிகாரிகளை (Assistant Electoral Registration Officers – AEROs) உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி சம்செர்கஞ்ச், ஃபராக்கா, மைனாகுரி, சூட்டி, தேப்ரா மற்றும் கானிங் புர்பா (இரண்டு அதிகாரிகள்) ஆகிய தொகுதிகளைச் சேர்ந்த இந்த அதிகாரிகள், வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பது மற்றும் நீக்குவது போன்ற முக்கியப் பணிகளில் முறையான ஆவணங்களைச் சரிபார்க்காமல் அலட்சியமாகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்து மேற்கு வங்க மாநில தலைமைச் செயலாளருக்குத் தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது விரிவான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், அவர்கள் செய்த தவறுகள் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, வாக்காளர் பட்டியலில் உள்ள ஆட்சேபனைகளைத் தீர்க்கும் போது எவ்வித அரசியல் தலையீடும் இருக்கக்கூடாது என்றும், சட்டப்படியான விதிகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இந்த அதிகாரிகள் அதிகார துஷ்பிரயோகம் செய்து, தகுதியற்ற விண்ணப்பங்களை அனுமதித்ததும், தேர்தல் ஆணையத்தின் நேரடி உத்தரவுகளைப் புறக்கணித்ததும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டதால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.(Online Tamil News)


