மேற்கு வங்கத்தின் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) செயல்முறையைச் சம்பந்தபடுத்தி ஏற்பட்ட சர்ச்சைகள் தொடரும் நிலையில், அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று உச்சநீதிமன்றத்தில் நேரடியாக வாதங்களை தொடங்கியுள்ளார். அவர் கூறியதாவது, SIR செயல்முறை காரணமாக சில உண்மையான வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாகவும், பொதுமக்கள் தவறான குற்றச்சாட்டுகள் மற்றும் குழப்பங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த செயல்முறையின் காரணமாக நீண்ட நாட்கள் பொதுமக்கள் பெரும் அவமானம் மற்றும் துயரம் அனுபவித்தனர் என்றும் சிலர் உடல் அல்லது உயிர் சேதங்களையும் சந்திக்க நேரிட்டதாக அவர் வாதம் செய்தார். இதற்கு முன்னதாக மம்தா பானர்ஜி மாநில அரசின் ஆதாரங்களை தேர்தல் ஆணையத்திற்கு எழுத்துப்பூர்வமாக அனுப்பியதாகவும் குறிப்பிட்டார். ஆனால் அதற்கு பதில் கிடைக்கவில்லை என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.(Online Tamil News)
மேலும் அவர், SIR நடைமுறையில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை விரிவாக விளக்கி, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். தொடர்ந்து, நீதிபதிகள் கடந்த காலத்தில் SIR தொடர்பான பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு, ஒரு வாக்காளர் கூட பட்டியலில் இருந்து நீக்கப்படக்கூடாது என்பதில் நிலைத்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர். இதன் அடிப்படையில், உச்சநீதிமன்றம் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு 2 நாட்களில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதனையடுத்து தன்னை நேரடியாக வாதிட அனுமதித்த உச்சநீதிமன்றத்திற்கு மம்தா நன்றி தெரிவித்தார் மற்றும் மக்களின் வாக்காளர் உரிமைகளை நிலை நாட்ட வேண்டுகோள் விடுத்தார்.


