தமிழக அரசியலில் புதிய வரலாறு படைத்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்.
ஒரு சட்டமன்ற தேர்தலில் அமைந்த கூட்டணி அடுத்த தேர்தல் வரையிலும் நீடித்ததில்லை என்பதுதான் தமிழக அரசியல் வரலாறு. அப்படி இருக்கும்போது தமிழக அரசியலில் புதிய வரலாறு படைத்திருக்கிறது திமுக கூட்டணி. ஒரே கூட்டணி நான்காவது முறையாக தேர்தலை சந்திக்கிறது.
அத்தனை சீட் வேண்டும், இத்தனை சீட் வேண்டும். ஆட்சியில் பங்கு வேண்டும், அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று வேகவேகமாக உள்ளே செல்வதைப் பார்த்தால் இந்த கூட்டணி உடையும் என்று பரபரப்பு எழும். ஆனால், என்ன மாயம் செய்கிறாரோ தெரியவில்லை. ஸ்டாலின் கொடுக்கும் இடங்களுக்கு சம்மதித்து சிரித்த முகத்துடன் வெளியே வருகிறார்கள் என்று எதிர்க்கட்சியினரும் அதிசயிக்கின்றன. தனது ஆளுமைப்பண்பின் காரணமாகவும், அரவணைக்கும் தன்மையின் காரணமாகவும் இந்த புதிய வரலாற்றினை படைத்திருக்கிறார் ஸ்டாலின்.

ஒரே கூட்டணி நான்கு முறை தேர்தலை சந்திக்கும் அதிசயம் ஒரு புறம் இருக்க, ஆளுங்கட்சி திமுகவுக்கு இருக்கும் மக்கள் ஆதரவு அலையினைப் பார்த்து புதிய கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு திமுக கடலில் சங்கமம் ஆகின்றன. கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, எஸ்.டி.பி.ஐ கட்சிகளும் திமுக கூட்டணிக்கு வந்துள்ளன.
ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று தவெக என்னதான் ஆசை காட்டினாலும் கூட, ‘’இது பண்டிகை காலத்து சலுகைகள் மாதிரி இருக்குது’’ என்று அலட்சியப்படுத்தி விட்டன விசிக மற்றும் கம்யூனிஸ்டுகள். ’கூட்டணி உடையாதா என எதிரிகள் ஏங்கினர். ஆஃபர் கொடுத்தேனும் திமுக கூட்டணியை உடைத்திட முயற்சி செய்தார்கள். தங்கள் கட்சியின் மீது நம்பிக்கை இல்லாமல் திமுக கூட்டணி உடையும் என்று சிலர் ஏங்கினர். அவர்களின் கற்பனைகளை, கனவுகளை ரசித்தபடி பயணத்தை மேற்கொண்டோம்.’’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

காங்கிரஸில் இருக்கும் சிலர் விஜய்யின் சலுகை அறிவுப்புக்காக ஆசைப்பட்டு கூட்டணியை சிதைக்க முயன்றாலும், திமுக மீண்டும் ஆட்சி அமைக்கப்போகிறது. நிச்சயிக்கப்பட்ட வெற்றி என்பது தெரிந்து திமுக கூட்டணியில் உடன்பாடு செய்துகொண்டிருக்கிறது காங்கிரஸ். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸுக்கு 28 சட்டமன்ற தொகுதிகளூம், ஒரு மக்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
திமுக – காங்கிரஸ் கூட்டணி உடைந்துவிடும், திமுக கூட்டணி கட்சிகள் சிதறிவிடும் என்று எதிர்க்கட்சியினர் சொல்லி வந்த நிலையில், திமுக – காங்கிரஸ் உடனான கூட்டணி ஒப்பந்தம் நிறைவு செய்யப்பட்டதும் பத்திரிகையாளர்களிடம் ’முடிந்தது’ என்பதை செய்கையினாலேயே காரில் ஏறப்போகும் முன் சிரித்துக்கொண்டே முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.

பெரும் சவாலாக இருந்த காங்கிரசுடன் இறுதி ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்ட நிலையில் திமுக கூட்டணியில் தற்போது 21 கட்சிகள் உள்ளன. தமிழக அரசியலில் இப்படி ஒரு பிரம்மாண்ட கூட்டணி அமைத்து இந்தியாவுக்கே வழிகாட்டும் முன்னுதாரணமாகத் திகழ்கிறது திமுக.



