தமிழ்நாடு சட்டமன்றத்தில் மத்திய-மாநில அரசுகளின் உறவுகள் குறித்த ஓய்வு பெற்ற நீதிபதி ஜோசப் குரியன் தலைமையிலான ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி அசோக் வரதன் ஷெட்டி, பேராசியர் நாகநாதன் ஆகியோர் அடங்கிய குழுவின் அறிக்கையை முன்வைத்து மாநில சுயாட்சி குறித்து உரையாற்றியிருக்கிறார் முதலமைச்சர். தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் சுயாட்சித் தன்மையுடன் கூடிய அதிகாரம் மிக்கவையாக இருக்க வேண்டும் என்பதுதான் மத்திய-மாநில உறவுகள் குறித்த குழுவின் பரிந்துரைகளாகும்.
இந்தியா ஒரு முழுமையான கூட்டாட்சி அரசாக இருக்க வேண்டும் என்கிற கோரிக்கை, அரசமைப்புச் சட்டம் உருவான காலத்திலிருந்தே வலியுறுத்தப்படுகிறது. தற்போதைய அரசமைப்பு என்பது கூட்டாட்சியை நோக்கிய பயணத்திற்குத் துணையாக உள்ளது. ஆனால், இதுவே முழுமையான கூட்டாட்சியாகாது. அரசின் அதிகாரங்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. 1. மத்திய அரசின் அதிகாரங்கள். 2. மாநில அரசின் அதிகாரங்கள். 3. இரண்டு அரசுகளுக்கும் ஒத்திசைவான அதிகாரங்கள். இதில் மத்திய அரசுக்கு அதிகாரங்கள் அதிகம். மாநில அரசுக்கு அதிகாரங்கள் குறைவு. இரண்டு அரசுகளுக்கும் ஒத்திசைவான அதிகாரங்களில் பெரும்பாலும் மத்திய அரசே ஆதிக்கம் செலுத்தும் நிலை உள்ளது. அத்துடன் அரசியல் சட்டத் திருத்தங்களின் அடிப்படையில் மாநிலங்களின் உரிமைகளை மத்திய அரசு எடுத்துக் கொள்ளும் நிலையும் உள்ளது. எனவே, மாநில அரசுகள் வலிமை குறைந்ததாகவும், மத்திய அரசு அனைத்து வலிமையும் ஒருங்கிணைந்த அரசாகவும் இருக்கும்போது கூட்டாட்சி என்ற சொல் கேலிக்குரியதாகவும் கேள்விக்குறியாகவும் மாறி விடுகிறது.
இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என நமது அரசமைப்புச் சட்டம் கூறுவதன் அடிப்படையில், மாநிலங்களுக்கு அதிக உரிமைகள் வழங்கப்பட வேண்டும். இதை 1963 முதல் தி.மு.க. வலியுறுத்தி வருகிறது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் அண்ணா இது பற்றி பேசினார். 1969ல் முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி இதற்கென ஓய்வு பெற்ற நீதிபதி ராஜமன்னார் தலைமையில் கமிஷன் அமைத்து, பின்னர் அதன் பரிந்துரைகள் அடிப்படையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாநில சுயாட்சி தீர்மானத்தை நிறைவேற்றினார். தமிழ்நாடு முன்னெடுத்த இந்த மாநில சுயாட்சி முழக்கம், பின்னர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும் ஒலித்தது. மேற்குவங்கம், கர்நாடகம் உள்ளிட்ட பல மாநில அரசுகளும் கூடுதல் அதிகாரங்களை வலியுறுத்துகின்றன. தமிழ்நாடு தொடர்ந்து இதனை வலியுறுத்துவதன் அடையாளம்தான், சட்டமன்றத்தில் முதலமைச்சரின் குரல். மக்களிடம் நேரடியாகத் திட்டங்களைக் கொண்டு சேர்க்கும் பொறுப்பு மாநிலங்களுக்கே உள்ள நிலையில், அவை தனக்கான நிதிக்கு மத்திய அரசையே சார்ந்திருக்கும் நிலையே நீடிக்கிறது. அதுவும், பா.ஜ.க. ஆட்சி அமைந்தபிறகு ஜி.எஸ்.டி. உள்ளிட்ட பல நடவடிக்கைகளும் மாநிலங்களின் அதிகாரங்களை மேலும் குறைத்துவிட்டன.
சுயாட்சி மிக்க மாநில அரசாக இருந்தால் தனது வரி வருவாயையும் இதர வருவாயையும் பெருக்கிக் கொண்டு, மத்திய அரசுக்கு தனது சார்பில் பங்களிப்பு செய்ய முடியும். ராணுவம், வெளிநாட்டு உறவு, கரன்சி இந்த மூன்றும் நாடு முழுவதும் பொதுவானதாக இருக்க வேண்டியது கட்டாயம் என்பதால் இவை மத்திய அரசிடமும், கல்வி-சுகாதாரம்-வரி வருவாய்-உள்கட்டமைப்பு-வேளாண்மை-தொழில்- அவற்றுக்கான உரிமங்கள் உள்ளிட்ட அனைத்தும் மாநில நிர்வாகத்திடம் இருக்க வேண்டும் என்பதை தி.மு.க பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. தற்போது அதன் தேவை இன்னும் அதிகரித்துள்ளது. ஒசூரில் விமான நிலையம் அமைப்பதற்கு ஒன்றிய அரசு மறுத்து வருவதால், தமிழ்நாட்டின் தொழில் கட்டமைப்பில் தடங்கல் ஏற்படுகிறது. விமானத் தளம், ரயில் போன்றவையும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய காலம் உருவாக வேண்டும். அதற்குப் பெயர்தான் சுயாட்சி. சுயாட்சி மிக்க மாநிலங்களை ஒருங்கிணைத்து அமையும் மத்திய அரசே கூட்டாட்சி அரசாக இருக்கும்.
தமிழ்நாட்டில் தனிப்பெரும்பான்மையுடன் தி.மு.க. ஆட்சி செய்வது சுயாட்சியுமல்ல, மத்திய பா.ஜக. அரசில் கூட்டணிக் கட்சிகள் பங்கேற்பது கூட்டாட்சியுமல்ல என்பதையும் இந்த இடத்தில் தெளிவுபடுத்த வேண்டும். தற்போது மத்திய அரசிடமே அதிகாரங்கள் குவிந்து கிடக்கின்றன. மாநிலங்களிடம் மிச்சமுள்ள அதிகாரங்களையும் மத்திய அரசு எடுத்துக்கொள்ளும் சூழல்களும் உருவாகின்றன. மாநிலங்களையே இல்லாமல் செய்து, யூனியன் பிரதேசமாக மாற்றும் முயற்சியையும் பா.ஜ.க. அரசு மேற்கொண்டு வருகிறது. ஜம்மு-காஷ்மீர் அதற்கான உதாரணமாகத் திகழ்கிறது. இத்தகைய சவாலான நிலையில்தான், மாநில சுயாட்சிக் குரலை மீண்டும் முன்னெடுத்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர். தேர்தல் நேரக் குரல்கள் பல திசைகளிலும் எதிரொலிக்கும்.
தலையங்கம் : சுயாட்சியும் கூட்டாட்சியும்!



