கேரளா ஸ்டோரி முதல் பாகத்தின் சர்ச்சைகளே இன்னமும் ஓயாத நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் 27ம் தேதி ரிலீஸ் ஆகவிருக்கிறது. முன்னதாக வெளியாகி இருக்கும் டிரைலர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. சமூகத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்று சொல்லி இப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று வலியுத்தி இருக்கிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.
திரைப்படத்தின் மூலம் நல்லிணக்கத்தை கெடுக்க முயலும் எந்த முயற்சியையும் ஜனநாயக வழியில் தடுத்து நிறுத்துவோம் என்கிறார் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் மு.தமிமுன் அன்சாரி.

தி கேரள ஸ்டோரி – 2 என்ற திரைப்படத்தில் சமூக நல்லிணக்கத்தையும், பொது அமைதியும் கெடுக்கும் காட்சிகளும் வசனங்களும் உள்ளதாக தெரிய வருகிறது.
கேரள முதல்வர் பினராயி விஜயனும் தன் கடும் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார். இதனை தமிழ்நாட்டில் திரையிடுவதை தவிர்க்குமாறு திரையரங்க உரிமையாளர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் உண்மைக்கு மாறாக திரிபு வாதத்தை விதைக்க நினைப்பதும், அதன் மூலம் கலவரங்களை தூண்ட நினைப்பதும் ஏற்புடையதல்ல!

கலவரங்களை ஏற்படுத்துவதற்கு பெயர் திரைப்படம் என்றால், அதனை எதிர்ப்பது ஜனநாயக சக்திகளின் கடமையாகும்! இதனை மீறி திரை அரங்குகளில் இப்படத்தை திரையிட முயன்றால், ஜனநாயக சக்திகளை திரட்டி திரையரங்குகளை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவோம்!
அனைத்து சமூகத்தவரின் ஒற்றுமையும், பொது அமைதியுமே எங்களுக்கு முக்கியம். அதை கெடுக்க முயலும் எந்த முயற்சிகளையும் ஜனநாயக வழியில் தடுத்து நிறுத்துவோம்!’’



