விஜய் முதலில் த்ரிஷா வீட்டை விட்டு வெளியே வரட்டும். குடும்பத்துடன் இருக்க விஜய் பழக வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியிருந்தார்.
நயினார் நாகேந்திரன் கருத்துக்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வரும் போதிலும் அவர் ஏன் அப்படி பேசினார் என்ற கேள்வியை எழுப்புகிறார் டிடிவி தினகரன்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை, ’’தவெக தலைவர் விஜய் குறித்து அநாகரிகமாகவும் தரக்குறைவாகவும் விமர்சனம் செய்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

மேலும், நடிகை திரிஷா பெயரை குறிப்பிட்டு அநாகரிகமாக விமர்சனம் செய்தது அரசியல் மாண்புக்கும், சமூக நெறிமுறைக்கும் முரணானதாகும். அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்; ஆனால் தனிநபர் மீதான அவதூறு மற்றும் அநாகரிகமான பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது.
பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான கருத்துகள் சமூகத்தில் தவறான முன்னுதாரணமாக அமையும். இதுபோன்ற தரக்குறைவான அரசியல் பேச்சுக்களை தவிர்த்து, நாகரிகமான மற்றும் பொறுப்பான அரசியல் உரையாடலுக்குத் தலைவர்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வலியுறுத்துகிறேன்’’ என்று கூறி இருக்கிறார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ‘’தனிப்பட்ட விமர்சனங்களை யாருமே தவிர்க்க வேண்டும். நயினார் நாகேந்திரன் பொதுவாக அப்படி பேசக்கூடியவர் அல்ல. ஏன் அப்படி பேசினார் என்று தெரியவில்லை. தனிப்பட்ட கருத்துக்களை தவிர்ப்பதுதான் ஆரோக்கியமான அரசியலாக இருக்கும்’’ என்கிறார்.

‘’நயினார் நாகேந்திரனொரு அரசியல்வாதியே அல்ல. அவர் அரசியல்வாதியாக முயற்சித்துக் கொண்டிருக்கிறார். அரசியல் கருத்துக்களைச் சொல்லும் போது பொதுவெளியில் பயணிக்கும் பெண்களைப் பற்றி அவதூறாகப் பேசுவது அழகல்ல. நயினார் நாகேந்திரன் போன்றவரிடம் இருந்து வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது’’ என்கிறார் தவெக நிர்வாகி சிடிஆர் நிர்மல்குமார்.

’’அரசியலில் ஈடுபட்டுள்ள ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பொதுவெளியில் விமர்சிப்பது அநாகரீகம். அரசியலுக்கு தொடர்பில்லாத பெண்ணை இழித்து பேசுவது பெண்மையை களங்கப்படுத்தும் செயல். நயினார் நாகேந்திரனை பாஜகவில் உள்ள பெண் தலைவர்களே கண்டிக்காமல் மவுனம் காப்பது அநீதி. குஷ்பு, வானதி சீனிவாசன் உள்ளிட்ட பெண் பாஜக தலைவர்கள் மவுனமாக இருப்பது ஏன்? ’’ என்கிறார் திமுக எம்பி கனிமொழி சோமு.



