அரசியலில் கெடு விதிப்பது எல்லாம் கேடு விளைவிக்கும் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர், பிரிந்தவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்கச் சொல்லி எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் விதித்திருந்த 10 நாள் விவகாரம் பற்றி.
’’செங்கோட்டையன் பொதுவெளியில் பேசியிருக்கக் கூடாது. பொதுக்குழுவில்தான் பேசி இருக்க வேண்டும். கட்சி தலைமைக்கே கெடு விதித்ததை ஏற்க முடியாது. நானும் மூத்த நிர்வாகிதான். கட்சி தலைமைக்கு கட்டுப்பட்டு நடக்கிறேன்’’ என்கிறார் அதிமுக மூத்த தலைவர் செம்மலை.

இது குறித்த கேள்விக்கு கடுப்பான செங்கோட்டையன், ’’செம்மலை தர்ம யுத்தத்திற்கு சென்றுவிட்டு வந்தவர். அவர் அப்படித்தான் பேசுவார்;அவர் பொதுச்செயலாளருடன் ஒட்டி இருப்பதால் அப்படி பேசுகிறார்’’ என்று சொன்னவர், ‘’பொதுக்குழுவை கூட்டினால்தானே அங்கே பேசமுடியும். பொதுக்குழுவை எங்கே கூட்டினீர்கள்?’’என்ற கேள்வியை எழுப்பினார்.
’காலில் வேண்டுமானாலும் விழுகிறோம். இயக்கத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று காஞ்சிபுரத்திலும் தொண்டர்கள் பேசி இருக்கிறார்கள். அந்த தொண்டர் களுக்காகவும்தான் கருத்து தெரிவித்தேன். அவர்களையும் புறக்கணித்திருக்கிறார்கள்’’ என்று சொல்லும் செங்கோட்டையன், பழனிசாமியின் இந்த நடவடிக்கையை தான் எதிர்பார்க்கவில்லை என்கிறார்.
’’போகப் போகத் தெரியும். காலம் தான் பதில் சொல்லும்’’ என்று இந்த விவகாரத்தில் அடுத்தது என்ன? என்ற கேள்விக்கு பதில் சொல்கிறார் செங்கோட்டையன்.



