தேசிய ஜனநாயக கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பாமக இடம்பெற்றதால் ராமதாஸ் தலைமையிலான பாமக திமுக கூட்டணியில் இடம்பெறுகிறது என்ற பேச்சு இருக்கும் நிலையில், திமுக கூட்டணியில் இருக்கும் விசிக தலைவர் திருமாவளவன் தங்களின் நிலைப்பாடு குறித்து விளக்கம் அளித்திருக்கிறார்.
’’திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 2016க்கு பிறகு உருவானது. அதிலிருந்து தொடர்ச்சியாக கட்டுக்கோப்பாக கூட்டணியில் இருந்து ஒரு கட்சி கூட விலகாத நிலையில் கருத்தியல் அடிப்படையில் இயங்கி வருகிறது.
அதனால் திமுக கூட்டணி தேர்தல் வேலைகளை தொடங்குவதில் எந்த சிக்கலும் இருக்காது. திமுகவை பொறுத்தவரையிலும் அவர்கள் எப்போதே களப்பணியை தொடங்கிவிட்டார்கள். அடுத்து கூட்டணி கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்துவதுதான் திட்டமிட வேண்டியதாக இருக்கும். விரைவில் அதை நடைமுறைக்கு கொண்டு வருவார்கள்.

ஒவ்வொரு தேர்தலிலும் இரட்டை இலக்க எண்ணில் தொகுதிகளை பெற வேண்டும் என்கிற முயற்சியில் தான் இருக்கிறோம். 2001ல் தமிழகத்தில் 8 புதுவையில் 2 என இரட்டை இலக்கத்தில் போட்டியிட்டோம். 2011ல் 10 தொகுதிகளில்தான் போட்டியிட்டோம். 2016ல் 6 தொகுதிகளில் போட்டியிடும் சூழல் உருவானது. இப்போதும் இரட்டை இலக்கத்தில்தான் கேட்போம். அதை ஒரு நிபந்தனையாக நாங்கள் எப்போதும் முன்வைத்ததில்லை.
இந்த கட்சியை சேர்க்கக்கூடாது, இந்த கட்சியை சேர்க்கலாம் என்று திமுகவுக்கு ஆலோசனைகள் சொல்லவும், வலியுறுத்தவும் மாட்டோம். ஆனால், தேர்தலை பொறுத்தவரையிலும் எங்களுக்கு சில வரையறைகள் உண்டு. அந்த அடிப்படையில் 2011ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கு பிறகு எடுத்த முடிவு, சோசியல் என்ஜினியரிங் என்கிற பெயரில் வெறுப்பு அரசியலை மட்டுமே மூலதனமாக கொண்டு தேர்தல் அரசியலை சந்திக்கிற கட்சிகளாக பாஜகவையும் பாமகவையும் நாங்கள் அறிந்திருக்கிறோம்.

அந்த புரிதலின் அடிப்படையில் இந்த இரு கட்சிகளும் சிறுபான்மையினருக்கு எதிரான அரசியல், தலித்துகளுக்கு எதிரான அரசியலை முன்னிறுத்தி சோசியல் என்ஜினியரிங் என்கிற பெயரில் செயல்படுவதால் இவர்களோடு நாம் தேர்தல் களத்தை சந்திக்க இயலாது இவர்கள் இடம்பெறுகின்ற கூட்டணியிலும் நாம் இடம் பெற முடியாது என்கிற கொள்கை முடிவினை நாங்கள் எடுத்திருக்கிறோம்.
வன்னியர் சமூகத்தை நாங்கள் நேசிக்கிறோம். அந்த சமூகத்திற்கு எதிரான முடிவு அல்ல இது. பாமக கையாண்ட சோசியல் என்ஜினியரிங் என்கிற யுக்தி ஒரு நிரந்தரமான வெறுப்பு அரசியலை இங்கே உருவாக்கிவிடும். சமூக பிரிவினையை அது வளர்த்துவிடும் என்கிற நிலையில் நாங்கள் இந்த நிலைப்பாட்டை எடுக்க நேர்ந்தது.
விசிகவின் இந்த முடிவை திமுகவுக்கு நெருக்கடி தரும் முடிவாக திமுக பார்க்காது என்று நான் நம்புகிறேன்.’’



