அமெரிக்காவின் 250ஆவது சுதந்திர தின விழா இந்த ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி நடைபெற உள்ளன. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் குறிக்கும் வகையில், அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்பின் உருவம் பொறித்த 24 காரட் தங்க நாணயத்தை வெளியிட அமெரிக்காவின் ஃபெடரல் ஆர்ட்ஸ் கமிஷன் (Federal Arts Commission) தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.

வழக்கமாக அமெரிக்கச் சட்டங்களின்படி, உயிருடன் இருக்கும் ஒரு அதிபரின் உருவத்தை அந்நாட்டுச் செலாவணியில் பயன்படுத்துவதற்குத் தடைகள் உள்ளன.
இருப்பினும், இது ஒரு சிறப்பு நினைவு நாணயம் (Commemorative Coin) என்பதால், இந்தத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு ட்ரம்ப்பின் உருவம் அதில் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக 1926-ஆம் ஆண்டு அமெரிக்காவின் 150-வது சுதந்திர தினத்தின் போது, அப்போதைய அதிபர் கால்வின் கூலிட்ஜ் உருவம் நாணயத்தில் இடம்பெற்றதே இத்தகைய நிகழ்வுக்கு ஒரே ஒரு முந்தைய உதாரணமாக உள்ளது.

மேலும், இந்த நாணயத்தின் வடிவமைப்பானது மிகவும் தனித்துவமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அதிபர் ட்ரம்ப் ஒரு மேஜையில் கைகளை ஊன்றி நிற்பது போன்ற புகைப்படம் இடம்பெறுகிறது. நாணயத்தின் மேற்புறத்தில் சுதந்திரம் (LIBERTY) என்ற வாசகமும், அமெரிக்கா சுதந்திரம் பெற்ற ஆண்டான 1776 மற்றும் தற்போதைய 2026 ஆகிய ஆண்டுகளும் பொறிக்கப்பட்டிருக்கும். ட்ரம்ப் நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்த நாணயம் சுமார் 3 இன்ச் விட்டம் கொண்ட ஒரு பெரிய பதக்கம் போன்ற அளவில் தயாரிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த முடிவு அமெரிக்க அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயகக் கட்சியினர் மற்றும் சில விமர்சகர்கள், உயிருடன் இருக்கும் ஒரு தலைவரின் உருவத்தை நாணயத்தில் பொறிப்பது ஜனநாயக மாண்புகளுக்கு எதிரானது என்றும், இது மன்னராட்சி முறையை நினைவூட்டுவதாகவும் விமர்சிக்கின்றனர். ஆனால், ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் மற்றும் இந்தத் திட்டத்தை முன்னெடுப்பவர்கள், நாட்டின் 250ஆவது மைல்கல் ஆண்டில் பதவியில் இருக்கும் அதிபரைக் கௌரவிப்பது ஒரு வரலாற்றுத் தேவை என்று வாதிடுகின்றனர். இந்த நாணயங்கள் பொதுப் புழக்கத்திற்கான பணமாகப் பயன்படுத்தப்படாமல், நினைவுப் பொருட்களாகச் சேகரிப்பவர்களுக்காக (Collectors) மட்டுமே விற்பனை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.(Online Tamil News)


