ஹாலிவுட் திரையுலகின் ‘கியூட்’ ஜோடிகளான டாம் ஹாலண்ட் மற்றும் ஜெண்டயா ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாக வெளியாகி இருக்கும் செய்தி தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

‘ஸ்பைடர் மேன்’ படத்தில் இணைந்து நடித்தபோது தொடங்கிய இவர்களது காதல், பல ஆண்டுகளாக ரசிகர்களால் மிக நெருக்கமாக கவனிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஒரு முக்கிய விருது விழாவில் கலந்துகொண்ட ஜெண்டயாவின் நெருங்கிய நண்பரும் பிரபல ஆடை வடிவமைப்பாளருமான லா ரோச், செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போது இந்த அதிரடி ரகசியத்தை போட்டுடைத்தார். இவர்களது திருமணத் திட்டங்கள் எப்போது என கேட்டபொழுது, “திருமணம் ஏற்கனவே முடிந்துவிட்டது, நீங்கள் அதைத் தவறவிட்டுவிட்டீர்கள்” என்று அவர் மிக இயல்பாகக் கூறியது அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்தத் தகவலைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பல ஆதாரங்களைத் திரட்டத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக கடந்த சில வாரங்களாக ஜெண்டயா தனது விரலில் அணிந்திருந்த விலை உயர்ந்த நிச்சயதார்த்த வைர மோதிரத்திற்குப் பதிலாக, மிகவும் எளிமையான ஒரு திருமண மோதிரத்தை (Wedding Band) அணிந்திருப்பதை ரசிகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். 2021-ஆம் ஆண்டு இவர்களது காதல் உறுதி செய்யப்பட்டதில் இருந்தே, தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை மிகவும் ரகசியமாகவே இந்த ஜோடி கையாண்டு வருகிறது. 2025-ஆம் ஆண்டு தொடக்கத்தில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததை டாம் ஹாலண்ட் மறைமுகமாக உறுதிப்படுத்திய நிலையில், தற்போது லா ரோச்சின் இந்த வாக்குமூலம் அவர்கள் அதிகாரப்பூர்வமாக தம்பதிகளாகிவிட்டனர் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இருப்பினும், இந்தத் திருமணச் செய்தி குறித்து டாம் ஹாலண்ட் அல்லது ஜெண்டயா தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு நேரடி விளக்கமும் அளிக்கப்படவில்லை. பொதுவாகவே பெரிய கொண்டாட்டங்களைத் தவிர்த்து, நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் மட்டும் எளிய முறையில் திருமணத்தைச் செய்ய விரும்புவதாக இவர்கள் கடந்த காலங்களில் கூறி வந்தனர். அதன் அடிப்படையிலேயே இந்த ரகசியத் திருமணம் நடந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. பீட்டர் பார்க்கர் மற்றும் எம்.ஜே ஜோடி நிஜ வாழ்க்கையிலும் ஒன்று சேர்ந்திருப்பதை அறிந்து உலகம் முழுவதும் உள்ள இவர்களது ரசிகர்கள் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.(Online Tamil News)


