மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் பயணம் செய்த விமானம் குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை நடைபெறவிருந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவர் சிறிய ரக விமானம் மூலம் பாராமதி நோக்கி புறப்பட்டுச் சென்றார். தொடர்ந்து, விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் அம்மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அஜித் பவார் (Ajit Pawar) பயணம் செய்த விமானம் பாம்பார்டியர் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட லியர்ஜெட் 45XR என்ற நடுத்தர அளவிலான வணிக ஜெட் விமானம் என்பது தெரியவந்துள்ளது. இந்த விமானம் பொதுவாக VIP மற்றும் கார்ப்பரேட் பயணங்களுக்காக பயன்படுத்தப்படும் சிறிய ரக ஜெட் ஆகும். இரட்டை எஞ்சின்களைக் கொண்ட இந்த விமானம், 1990களின் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். குறிப்பாக 1998 ஆம் ஆண்டு லியர்ஜெட் மாடல் விமானங்கள் பயன்பாட்டுக்கு வந்தன.

லியர்ஜெட் 45XR (Learjet 45XR) விமானத்தின் முக்கிய சிறப்பம், இது அதிகபட்சமாக 51,000 அடி உயரம் வரை பறக்கும் திறன் கொண்டது. இந்த உயரத் திறன் காரணமாக, பொதுவான வணிக விமானப் போக்குவரத்து மற்றும் பாதகமான வானிலை நிலைமைகளுக்கு மேலாக பறக்க முடிகிறது. இதனால், மென்மையான மற்றும் பாதுகாப்பான விமானப் பயண அனுபவம் கிடைக்கிறது. பொதுவாக வணிக விமானங்கள் 30,000 முதல் 40,000 அடி உயரத்தில் பயணிப்பதால், இந்த அம்சம் குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.
இந்த விமானம் மணிக்கு சுமார் 850 முதல் 860 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது. மேலும், ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் சுமார் 2,700 முதல் 3,000 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். இதன் காரணமாக, இந்தியாவில் குறுகிய மற்றும் நடுத்தர தூர விமானப் பயணங்களுக்கு அரசியல்வாதிகள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் இந்த விமானத்தை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும், சிறிய நகரங்களுக்கு அரசியல் பரப்புரை மற்றும் நிகழ்ச்சிகளுக்காக செல்லும் போது, சிறிய விமான நிலையங்கள் மற்றும் குறுகிய ஓடுபாதைகளில் இயங்கும் வகையில் லியர்ஜெட் 45XR விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 6 முதல் 8 பயணிகள் வரை பயணம் செய்ய முடியும். தொடர்ந்து, சுமார் 15 மீட்டர் நீளம் கொண்ட இந்த விமானத்தில், பயணிகள் அமரும் பகுதி 20 அடி நீளம், 5 அடி அகலம் மற்றும் 4 அடி உயரம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.(Online Tamil News)
அஜித் பவார் பயணம் செய்த இந்த விமானம் டெல்லியை தளமாகக் கொண்ட சார்ட்டர் விமான நிறுவனமான VSR வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமானதும், அதே நிறுவனத்தால் இயக்கப்படுவதுமாகும். இந்த விமானம் இரண்டு ஹனிவெல் TFE731 டர்போஃபேன் இயந்திரங்களால் இயக்கப்படுகிறது.

மேலும், 2023 ஆம் ஆண்டு செப்டம்பரில் இதே VSR நிறுவனத்தால் இயக்கப்பட்ட லியர்ஜெட் விமானம் ஒன்று மும்பையில் விபத்தில் சிக்கியிருந்ததும் தற்போது கவனத்துக்கு வந்துள்ளது.


