மயில் மீது ஏறி முருகன் உலகை சுற்றி வருவதற்குள் பெற்றோரான சிவபெருமான் – பார்வதியே உலகம் என்று சொல்லி அவர்களை சுற்றி வந்து ஞானப்பழத்தை பெற்றுக்கொண்ட விநாயகரின் கதை போலாகிவிட்டது அன்புமணியின் கதை என்று நினைத்தால் ராமதாஸ் தரப்பு சொல்வதைப் பார்த்தால் கதை வேறு ஒரு கோணத்தில் செல்கிறது.
பாமக யாருக்கு? அக்கட்சியின் சின்னம் மாம்பழம் யாருக்கு? என்று ராமதாஸ் – அன்புமணி இடையே எழுந்த மோதலில் பாமகவும் மாம்பழ சின்னமும் அன்புமணிக்கே கிடைத்திருக்கிறது. என்.டி.ஏ. கூட்டணியில் இருந்ததால் அன்புமணிக்கு இது சாதகமாகி இருக்கிறது. என்.டி.ஏ. கூட்டணியி இல்லாததால் ராமதாசுக்கு சிக்கலாகி இருக்கிறது என்கிற பேச்சு எழுந்திருக்கிறது.

ஆவணங்களின் அடிப்படையில் பாமக தலைவராக அன்புமணியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்திருந்தது. இதை எதிர்த்து ராமதாஸ் தரப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. தேர்தல் ஆணையம் கொடுத்த அறிக்கையினை வைத்து அன்புமணியே பாமக தலைவராக தொடர்கிறார் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தி இருக்கிறது.
அங்கீகரிக்கப்படாத கட்சியின் உட்கட்சி விவகாரங்களில் தேர்தல் ஆணையம் முடிவு செய்ய முடியாது என்கிற உத்தரவை மாற்றக்கோரி தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவில் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அங்கீகரிக்கப்படாத கட்சிகளில் உட்கட்சி பிரச்சனை எழுவதற்கு முன்பு தரப்படும் ஆவணங்களின் அடிப்படையில் அதனை அங்கீகரிக்க தங்களுக்கு அதிகாரம் உள்ளது எனும் தேர்தல் ஆணையத்தின் வாதத்தை ஏற்றது டெல்லி உயர்நீதிமன்றம்.

நீதிமன்றத்தின் தீர்ப்பை சுட்டிக்காட்டி அன்புமணி தரப்பு வழக்கறிஞர் பாலு, ‘’பாமகவும் மாம்பழம் சின்னமும் அன்புமணிக்கே’’என்கிறார்.



