உலகின் மிகப்பெரிய எரிசக்தி மற்றும் பெட்ரோலிய உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மற்றும் சவுதி அரேபியாவின் மிக முக்கிய எரிசக்தி மையமான ராஸ் தனுரா (Ras Tanura) பகுதியில் அமைந்துள்ள சவுதி அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
நாளொன்றுக்கு சுமார் 5,50,000 பேரல் கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும் திறன் கொண்ட இந்த ஆலை முடங்கியதால், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், தாக்குதலின்போது ஆலை வளாகத்தில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தீயணைப்புப் படையினர் தீயினை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் தாக்குதல் செய்தி வெளியான உடனேயே சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயரத் தொடங்கியது. குறிப்பாக, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 80 டாலர் என்ற நிலையை எட்டியுள்ளது, இது கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய உயர்வாகும். சமீபத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி உயிரிழந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே ஈரான் ஆதரவு படைகள் சவுதி அரேபியாவின் இந்த முக்கிய எரிசக்தி கட்டமைப்பை இலக்கு வைத்துள்ளன.
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் இந்தப் போர் பதற்றம், உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.(Online Tamil News)


