தென்மேற்கு இங்கிலாந்தின் சோமர்செட் பகுதியில் உள்ள சியூ வேலி (Chew Valley) எனும் இடத்தில், மெட்டல் டிடெக்டர் உதவியுடன் தேடுதல் பணியில் ஈடுபட்ட ஏழு பேர் கொண்ட குழுவினர் சுமார் 1,000 ஆண்டுகள் பழமையான 2,584 வெள்ளி நாணயங்களைக் கண்டெடுத்துள்ளனர்.
கி.பி. 1066 முதல் 1068 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்த இந்த நாணயங்கள், இங்கிலாந்து வரலாற்றின் மிக முக்கியமான திருப்புமுனையான நார்மன் படையெடுப்பின் (Norman Conquest) போது நிலத்தில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த நாணயங்களில் கடைசி சாக்சன் மன்னர் இரண்டாம் ஹரோல்ட், நார்மன் வம்சத்தைத் தோற்றுவித்த வில்லியம் (William the Conqueror) மற்றும் எட்வர்ட் ஆகிய மூவேந்தர்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
இந்த அரிய புதையலின் மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 47 கோடி (4.3 மில்லியன் பவுண்டுகள்) ஆகும். இங்கிலாந்து வரலாற்றிலேயே இதுவரை கண்டெடுக்கப்பட்ட மிக அதிக மதிப்புள்ள புதையல்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. தற்போது இந்த நாணயங்களை ‘சவுத் வெஸ்ட் ஹெரிடேஜ் டிரஸ்ட்’ என்ற அமைப்பு வாங்கியுள்ளதுடன், இவை லண்டனில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன. அந்நாட்டு சட்டப்படி, இந்தத் தொகை புதையலைக் கண்டுபிடித்தவர்களுக்கும், அந்த நிலத்தின் உரிமையாளருக்கும் சமமாகப் பகிர்ந்து அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.(Online Tamil News)


