தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக இணைப்பு தொடர்பாக நாளை இறுதி முடிவு எடுப்பதற்காக டெல்லிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார் விஜய். டெல்லியில் அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச இருக்கிறார்.
அதிமுக தரப்பிலும் பாஜக தரப்பிலும் பலரும் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்த பின்னரும் கூட்டணி தொடர்பாக விஜய் தொடர்ந்து இழுத்தடித்துக் கொண்டே இருந்ததால் ஒவ்வொரு முறையும் பேச்சுவார்த்தை பாதியிலேயே நின்றுவிட்டது.
தற்போது இந்த பேச்சுவார்த்தை சற்று ஆழமாகவே சென்றிருக்கிறது. என்.டி.ஏ. கூட்டணிக்கு வந்தால் துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்று ஆந்திர துணை முதல்வர் பவன்கல்யாண் மூலமாக விஜய்க்கு உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது.

இன்னொரு பக்கம் ராமதாஸ், மற்றும் சசிகலாவுடன் விஜய் கூட்டணி அமைக்கப்போகிறார் என்றும் பேச்சு இருக்கிறது.
நேற்றைக்கு கூட தவெகவின் இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார், என்.டி.ஏ. கூட்டணியில் தவெக சேர எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்று வரும் கட்சிகளுடம் தான் கூட்டணி என்று அடித்துச்சொன்னார்.

ஆனால் நாளை சிபிஐ விசாரணைக்காக விஜய் டெல்லிக்கு செல்லவிருக்கும் நிலையில் இன்றைக்கு மாவட்டச் செயலாளர்களிடம் காணொளி வாயிலாக நடத்திய அவசர ஆலோசனையில், கூட்டணி தொடர்பாக பேச, கூட்டணியாக இருந்தாலும் சரி, தனித்து நின்றாலும் சரி தலைவர் எடுக்கும் முடிவுக்கு ஆதரவு என்று 98 மாவட்ட செயலாளர்கள் ஆதரவுக்கரம் நீட்டி இருக்கிறார்கள். 22 மாவட்டச்செயலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 10 மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக்கூட்டத்தையே புறக்கணித்துள்ளனர்.
என்ன முடிவெடுக்கப்போகிறார் விஜய்? என்பதே தவெக வட்டாரத்தில் இப்போதைய பரபரப்பாக இருக்கிறது.



