இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சரும் எம்பியுமான சி.வி. சண்முகம், “அப்துல் கலாம் கனவுக் காண சொன்னார். இவர் (முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்) அதைவிட ஒருபடி மேலேச்சென்று உங்கள் கனவை சொல்லுங்கள் நான் நிறைவேற்றுகிறேன் எனச் சொல்கிறார். ஆமாம், எனக்கு நயன்தாரா வேண்டும்.என் கனவை நிறைவேற்றுவாரா? கேட்பார்கள் எனக்கு நயன்தாராவை கல்யாணம் செய்து வைய்யுங்கள் என்று. இவர் நிறைவேற்றுவாரா?” எனப் பேசியிருந்தார்.

இவாறு பேசியதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், பொதுக்கூட்ட மேடையில் நடிகை நயன்தாரா குறித்து அவதூறான முறையில் பேசியதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கொள்கை ரீதியாக கட்சிகள் எப்படி வேண்டுமானாலும் விவாதிக்கலாம், ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பில் இருப்பவர்கள் அடிப்படை கண்ணியத்தோடும், வார்த்தைகளை மிகவும் கவனமாகவும் கையாள வேண்டும் என்று நடிகர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.மேலும், சபை நாகரிகத்தை மறந்து பொதுவெளியில் ஒரு பெண் கலைஞரை இழிவுபடுத்தும் வகையில் பேசியது அரசியல் நாகரிகம் அல்ல என்றும், இதுவா உங்கள் கட்சித் தலைவர்கள் கற்றுக் கொடுத்த கொள்கை என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் விண்வெளி முதல் பேருந்து ஓட்டுவது வரை அனைத்துத் துறைகளிலும் சாதனை படைத்து வருவதையும், இந்திரா காந்தி மற்றும் ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் அரசியலில் கோலோச்சியதையும் சுட்டிக்காட்டியுள்ள நடிகர் சங்கம், திரைத்துறையினரை இவ்வளவு கேவலமாகப் பேசுவது கண்டிக்கத்தக்கது எனத் தெரிவித்துள்ளது. எனவே, சி.வி. சண்முகம் இனிவரும் காலங்களில் திரைத்துறை சார்ந்த பெண்களை மரியாதைக் குறைவாகப் பேசமாட்டேன் என்ற உத்தரவாதத்தை அளிக்க வேண்டும் என்றும் நடிகர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே குரலில் வலியுறுத்தியுள்ளனர்.(Online Tamil News)


