இந்திய இராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவாணே எழுதிய “Four Stars of Destiny” என்ற சுயசரிதை நூல், இந்தியா–சீனா எல்லை தொடர்பான முக்கிய சம்பவங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. குறிப்பாக 2020 ஆம் ஆண்டு லடாக் பகுதியில் ஏற்பட்ட ராணுவ பதற்றம் குறித்த தகவல்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளதால், அது தற்போது நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

2020 ஆகஸ்ட் 31 ஆம் தேதி இரவு, கிழக்கு லடாக்கில் உள்ள கைலாஷ் மலைத்தொடரில் இந்திய ராணுவம் மிக முக்கியமான உயரமான பகுதிகளை கைப்பற்றியது. இந்த மலைப்பகுதிகள் ராணுவ ரீதியாக மிகவும் முக்கியமானவை. ஏனெனில், உயரமான இடத்தில் இருக்கும் படைகளுக்கு எதிரிகளை எளிதாக கண்காணிக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் திறன் அதிகமாக இருக்கும். இந்திய படைகள் இந்த பகுதிகளை கைப்பற்றிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, சீன மக்கள் விடுதலைப் படையின் (PLA) டாங்குகள் மற்றும் வீரர்கள் ரெச்சின் லா பகுதிக்குத் துரிதமாக முன்னேற தொடங்கினர்.

இந்த ஆபத்தான நிலை குறித்து, இந்திய இராணுவத்தின் வடக்கு கட்டளைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் யோகேஷ் ஜோஷி உடனடியாக அப்போது இராணுவத் தலைமைத் தளபதியாக இருந்த நரவாணேக்கு தகவல் அளித்தார். நிலைமை மிகவும் தீவிரமாக இருப்பதை உணர்ந்த நரவாணே, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், தலைமை பாதுகாப்புத் தளபதி பிபின் ராவத் மற்றும் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உள்ளிட்ட உயரதிகாரிகளை தொடர்பு கொண்டு, என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெளிவான உத்தரவை கேட்டார்.
அந்த நேரத்தில், எல்லைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தக் கூடாது என்ற பழைய ஒப்பந்தமும், மேலிட அனுமதி இல்லாமல் தாக்குதல் செய்யக் கூடாது என்ற உத்தரவும்தான் நடைமுறையில் இருந்தது. இதனால், சீன படைகள் தொடர்ந்து முன்னேறினாலும், இந்திய படைகள் நேரடி தாக்குதலை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இந்திய வீரர்கள் எச்சரிக்கையாக ஒளிரும் குண்டுகளை சுட்டபோதும், சீன டாங்குகள் முன்னேறுவதை நிறுத்தவில்லை.(Online Tamil News)

சீன படைகள் இந்திய நிலைகளுக்கு ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் வந்தபோதும், தெளிவான அரசியல் அல்லது ராணுவ உத்தரவு கிடைக்காதது நரவாணே தனது நினைவுக் குறிப்பில் குறிப்பிடுகிறார். இந்த நிலைமை, எல்லைப் பாதுகாப்பு போன்ற மிக முக்கியமான விஷயங்களில் உடனடி முடிவுகள் எடுப்பது எவ்வளவு அவசியம் என்பதையும், தாமதம் ஏற்பட்டால் அது பெரிய அபாயமாக மாறும் என்பதையும் காட்டுகிறது. இந்த சம்பவங்கள் குறித்து நரவாணே எழுதிய இந்த சுயசரிதை நூல், சீன ஆக்கிரமிப்பு விவகாரம் தொடர்பாக பல கேள்விகளை எழுப்பியுள்ளது.


