ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்ற பெயர் இன்று உலக அரசியல், பணக்கார வட்டாரம் மற்றும் அதிகார மையங்களை உலுக்கும் ஒரு சொல்லாக மாறியுள்ளது. இது ஒரு சாதாரண குற்றவழக்கு அல்ல; பல ஆண்டுகளாக மறைக்கப்பட்ட உண்மைகள், சக்திவாய்ந்த நபர்களின் தொடர்புகள் உள்ளிட்டவைகளை ஒன்றிணைந்த ஒரு பெரும் சர்ச்சை ஆகும். மேலும் இது தொடர்பாக பல செய்திகளும், உண்மைகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன.
ஜெஃப்ரி எப்ஸ்டீன் யார்?
அமெரிக்காவைச் சேர்ந்த நிதி முதலீட்டாளராக அறியப்பட்ட எப்ஸ்டீன், ஆரம்பத்தில் ஒரு சாதாரண பின்னணியில் இருந்து வந்தவர். ஆனால் காலப்போக்கில், உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் மற்றும் அரச குடும்ப உறுப்பினர்களுடன் நெருக்கமான உறவுகளை உருவாக்கினார். தொடர்ந்து, அவரது அபார செல்வம், தனியார் விமானங்கள், தீவுகள் மற்றும் ரகசிய விருந்துகள் குறித்து பல கேள்விகள் எழுந்தாலும், நீண்ட காலம் அவர் யாராலும் தொட முடியாதவராகவே இருந்தார்.

குற்றச்சாட்டுகளின் பின்னணி
எப்ஸ்டீன் மீது எழுந்த முக்கிய குற்றச்சாட்டுகள், பல இளம் பெண்களும், சிறுமிகளும் கட்டாயப்படுத்தப்பட்டு பாலியல் ரீதியாகச் சுரண்டப்பட்டதாகும். பாதிக்கப்பட்டவர்கள் கூறியதன்படி, இது தனிப்பட்ட முறையில் நடந்த சம்பவம் அல்ல. பல ஆண்டுகளாக திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு அமைப்புசார்ந்த வலையமைப்பாக இருந்தது. இளம் வயதுடைய சிறுமிகள் வேலை அல்லது பண உதவி என்ற பெயரில் அணுகப்பட்டு, பின்னர் பணம், பரிசுகள் மற்றும் பயம் மூலம் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். மேலும், எப்ஸ்டீன் தனது தொடர்புகளை பயன்படுத்தி, சில சக்திவாய்ந்த நபர்களிடம் அவர்களை அழைத்துச் சென்றதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
2008 வழக்கும், எழுந்த சந்தேகங்களும் !
2008-ஆம் ஆண்டு எப்ஸ்டீன் மீது முதன்முறையாக வழக்கு பதிவு செய்யப்பட்டபோது, கடுமையான குற்றச்சாட்டுகள் இருந்தும் அவர் மிக எளிதாக தப்பியதாக கூறப்படுகிறது. மேலும், “எப்ஸ்டீனுக்கு பின்னால் யார் இருந்தார்கள்?” என்ற சந்தேகம் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களில் கேள்விக்குறியானது. மேலும், இக்குற்றச்சாட்டில் பல முக்கிய பெயர்கள் அப்போது வெளியில் வராமல் மறைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
2019-ல் மீண்டும் வெடித்த விவகாரம்
2019-ல் சிறுமிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக எப்ஸ்டீன் மீண்டும் கைது செய்யப்பட்டதும், இந்த வழக்கு உலகளாவிய கவனத்தை பெற்றது. இந்த முறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள், விமானப் பயண பதிவுகள் மற்றும் சாட்சியங்களின் வாக்குமூலங்கள், பல சக்திவாய்ந்த நபர்களின் பெயர்களை மறைமுகமாக வெளிப்படுத்தத் தொடங்கின. மேலும், உண்மைகள் முழுமையாக வெளிவந்தால், உலக அரசியல் மற்றும் சமூக அமைப்புகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு உருவானது.

சிறையில் மரணம் – தீராத மர்மம்
2019 ஆகஸ்ட் மாதம், எப்ஸ்டீன் சிறையில் மரணமடைந்தது இந்த விவகாரத்தை இன்னும் ஆழமான சந்தேகங்களில் ஆழ்த்தியது. அதிகாரப்பூர்வமாக இது தற்கொலை என அறிவிக்கப்பட்டாலும், கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாதது, காவலர்களின் அலட்சியம் போன்ற தகவல்கள் பல கேள்விகளை எழுப்பின. முக்கியமான உண்மைகள் வெளிவர இருக்கும் நேரத்தில் அவர் மரணமடைந்தது, உண்மையை மூடிமறைக்கவே இது நடந்ததா என்ற சந்தேகத்தை உலகம் முழுவதும் ஏற்படுத்தியது.
‘எப்ஸ்டீன் கோப்புகள்’ என்றால் என்ன?
கடந்த பல ஆண்டுகளாக, அமெரிக்க புலனாய்வாளர்கள் எப்ஸ்டீன் தொடர்பான மின்னஞ்சல்கள், தொடர்புப் பட்டியல்கள், விமானப் பயணப் பதிவுகள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் எனப் பெருமளவிலான தரவுகளைச் சேகரித்தனர். இவைதான் இப்போது, ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ என்று அழைக்கப்படுகின்றன.இவை கட்டுக்கட்டாக வெளியிடப்பட்டு வரும் நிலையில், பல ஆண்டுகளாக மறைக்கப்பட்ட தகவல்கள் இப்போது மெதுவாக வெளிச்சத்துக்கு வருகின்றன. இதனால் அரசியல் மற்றும் பிரபல வட்டாரங்களில் பதற்றம் அதிகரித்துள்ளது

இப்போது ஏன் மீண்டும் பேசப்படுகிறது?
சமீப காலமாக நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் பொதுமக்கள் அழுத்தம் காரணமாக, இந்த கோப்புகளில் உள்ள தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் தங்கள் குரலை உயர்த்தி பேச ஆரம்பித்துள்ளனர். இதனால், எப்ஸ்டீன் விவகாரம் ஒரு பழைய வழக்காக இல்லாமல், தற்போதைய உலக அரசியல் மற்றும் சமூக விவாதங்களின் மையமாக மாறியுள்ளது.
எப்ஸ்டீன் கோப்புகளில் இடம்பெற்ற உலகப் பிரபலங்கள்
ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில் அமெரிக்க மதிப்பற்ற டொனால்ட் ட்ரம்ப், பில் கிளின்டன், இளவரசர் ஆண்ட்ரூ, பில் கேட்ஸ், எலோன் மஸ்க் உள்ளிட்ட பல உலகளாவிய அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஆவணங்கள், எப்ஸ்டீனுக்கும் இவர்களுக்கும் இடையே ஏதேனும் தொடர்புகள் அல்லது சந்திப்புகள் இருந்திருக்கலாம் என்பதை மட்டும் சுட்டிக்காட்டுகின்றன.இதில் பெயர் இடம்பெற்றிருப்பதாலேயே அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கருத முடியாது என்பதையும் நீதிமன்ற ஆவணங்கள் தெளிவுபடுத்துகின்றன.(Online Tamil News)

மேலும், அரசியல் தலைவர்கள், அரச குடும்ப உறுப்பினர்கள், தொழில்துறை முன்னோடிகள் மற்றும் பொழுதுபோக்கு உலகப் பிரபலங்கள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க நபர்கள் எப்ஸ்டீனின் சமூக வட்டாரத்தில் இருந்ததாக இந்தக் கோப்புகள் காட்டுகின்றன. இதனால், எப்ஸ்டீன் உருவாக்கியிருந்த உயர்மட்ட தொடர்பு வலையமைப்பு எவ்வளவு பரவலாக இருந்தது என்பதே இந்த ஆவணங்கள் மூலம் வெளிப்படுகிறது.
எப்ஸ்டீன் கோப்புகளில் பிரதமர் மோடி பெயர்?
அண்மையில் அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட எப்ஸ்டீன் கோப்புகளில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் மறைமுகமாக குறிப்பிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த ஆவணங்களில், 2017 ஜூலை மாதம் ஜெஃப்ரி எப்ஸ்டீன் எழுதியதாகக் கருதப்படும் ஒரு மின்னஞ்சலில், பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம் குறித்து ஆதாரமற்ற குறிப்புகள் இடம்பெற்றுள்ளதுடன், 2019-ஆம் ஆண்டு டொனால்ட் ட்ரம்பின் முன்னாள் ஆலோசகர் ஸ்டீவ் பானனுடன் மோடியை சந்திக்க வைக்க எப்ஸ்டீன் முயன்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு இந்திய அரசு உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், பிரதமரின் இஸ்ரேல் பயணம் முழுமையாக அதிகாரப்பூர்வமானது என்றும், எப்ஸ்டீனின் மின்னஞ்சல்களில் உள்ள தகவல்கள் ஒரு குற்றவாளியின் அடிப்படையற்ற கற்பனைகள் மட்டுமே என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதமர் மோடி எப்ஸ்டீனுடன் நேரடி தொடர்பில் இருந்ததாகவோ, அவரது தீவுகளுக்கு சென்றதாகவோ அல்லது எந்தவிதமான சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாகவோ இந்தக் கோப்புகளில் எந்த ஆதாரமும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரியின் பெயரும் இந்த ஆவணங்களில் இடம்பெற்றதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியான காங்கிரஸ் இந்த விவகாரம் குறித்து உயர்மட்ட விசாரணை கோரியதால் அரசியல் சர்ச்சை உருவாகியுள்ளது.


