இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று முன் தினம் சோசியல் மீடியாவில், ‘’இந்தியாவின் பிரதமர் மோடியுடன் பேசியது பெருமையாக இருந்தது. அவர் எனது சிறந்த நண்பர்களில் ஒருவர், மேலும் தனது நாட்டின் சக்திவாய்ந்த மற்றும் மதிக்கப்படும் தலைவர். வர்த்தகம் மற்றும் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவது உட்பட பல விஷயங்களைப் பற்றி நாங்கள் பேசினோம்.
அவர் ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்திவிட்டு, அமெரிக்கா மற்றும் சாத்தியமானால் வெனிசுலாவிலிருந்து அதிக அளவில் வாங்க ஒப்புக்கொண்டார்.
ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துகொண்டிருக்கும், தற்போது நடந்து கொண்டிருக்கும் உக்ரைனில் உள்ள போரை முடிவுக்குக் கொண்டுவர இது உதவும்!

பிரதமர் மோடி மீதான நட்பு மற்றும் மரியாதை காரணமாகவும், அவரது கோரிக்கையின்படியும், உடனடியாக அமலுக்கு வரும் வகையில், அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம்.
இதன் மூலம் அமெரிக்கா பரஸ்பர வரியைக் குறைத்து, அதை 25% இலிருந்து 18% ஆகக் குறைக்கும். அதேபோல், அவர்களும் அமெரிக்காவிற்கு எதிரான தங்கள் வரிகள் மற்றும் வரியல்லாத தடைகளை பூஜ்ஜியமாகக் குறைக்க நடவடிக்கை எடுப்பார்கள்.
பிரதமர், 500 பில்லியன் டாலருக்கும் அதிகமான அமெரிக்க எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி மற்றும் பல பிற தயாரிப்புகளுக்கு மேலதிகமாக, “அமெரிக்கப் பொருட்களை வாங்குவதாகவும்” உறுதியளித்தார்.
இந்தியாவுடனான நமது அற்புதமான உறவு இனிவரும் காலங்களில் இன்னும் வலுப்பெறும். பிரதமர் மோடியும் நானும் காரியங்களைச் சாதிக்கும் இருவர், இது பெரும்பாலானோரால் சொல்ல முடியாத ஒன்று. இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி!’’ என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு பிரதமர் மோடி, ’’இன்று எனது அன்பான நண்பர் அதிபர் டிரம்புடன் பேசியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு இனி 18% குறைக்கப்பட்ட வரி விதிக்கப்படும் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த அற்புதமான அறிவிப்பிற்காக, இந்தியாவின் 1.4 பில்லியன் மக்கள் சார்பாக அதிபர் டிரம்பிற்கு எனது மனமார்ந்த நன்றிகள். உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களும், மிகப்பெரிய ஜனநாயக நாடுகளும் இணைந்து செயல்படும்போது, அது நமது மக்களுக்குப் பயனளிப்பதுடன், பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பிற்கான மகத்தான வாய்ப்புகளையும் திறந்துவிடுகிறது.
உலக அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கு அதிபர் டிரம்பின் தலைமைத்துவம் மிகவும் முக்கிய மானது. அமைதிக்கான அவரது முயற்சிகளுக்கு இந்தியா முழு ஆதரவளிக்கிறது.
நமது கூட்டாண்மையை முன்னோடியில்லாத உயரங் களுக்குக் கொண்டு செல்ல, அவருடன் நெருக்கமாகப் பணியாற்ற நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்’’ என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இது குறித்து மதுரை எம்.பி. சு .வெங்கடேசன் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், ’’பிரதமர் மோடி அமெரிக்காவிடம் சரணாகதி அடைந்தார் என்பதை உறுதி செய்கிறார் அமெரிக்க அரசின் அதிகாரப் பூர்வ செய்தித் தொடர்பாளர்.
இந்திய – அமெரிக்க ஒப்பந்தம் India-US இறுதி கட்டத்தில் இருப்பதாகவே நேற்று அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார். ஆனால், அதற்கு மாறாக இந்தியா ஒப்புக்கொண்ட முடிவுகளைப் பட்டியலிடுகிறார் அமெரிக்க அதிகாரி.
இந்தியாவின் நிர்வாகத்தை அமெரிக்காவுக்கு உள் வாடகைக்கு விட்டதா பா.ஜ.க.?’’ என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.



