கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார பேரணியின் போது ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசல் குறித்து சிபிஐ (CBI) தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்தத் துயரச் சம்பவத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட மொத்தம் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

சிபிஐ நடத்திய முதற்கட்ட விசாரணையில், கட்சியின் தலைவர் விஜய் பயணித்த வாகனம், பேரணியின்போது அனுமதிக்கப்பட்ட எல்லையைத் தாண்டி கூட்டத்திற்குள் சென்றதே விபத்துக்குக் காரணம் என சிபிஐ சந்தேகிக்கிறது. அதாவது, குறிப்பிட்ட இலக்கை விட சுமார் 20 மீட்டர் தூரம் கூடுதலாக வாகனம் முன்னேறிச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது

விஜய்யைத் திரையில் காண்பதற்காகக் காத்திருந்த ரசிகர்கள், அவரது வாகனம் அனுமதிக்கப்பட்ட இடத்தைத் தாண்டி கூட்டத்திற்கு மிக அருகில் வந்தவுடன் அவரை நோக்கி முண்டியடித்துக் கொண்டு சென்றதால் இந்த நெரிசல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் ஆஜரான விஜய்யிடம் சுமார் 7 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
மேலும்,படப்பிடிப்பு அல்லது விளம்பரக் காட்சிகளுக்காகத் திட்டமிட்டே வாகனம் கூட்டத்திற்குள் கொண்டு செல்லப்பட்டதா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

மேலும், பேரணித் திட்டமிடலில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்தும் அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. முன்னதாக, உரிய தடத்தில் செல்லாமல் வாகனம் மாறியதே கூட்ட நெரிசலைத் தூண்டிவிட்டதாகத் தமிழக காவல்துறை ஏற்கனவே தெரிவித்திருந்தது

இந்த வழக்கின் நேர்மையான விசாரணைக்காக உச்சநீதிமன்றம் இதனை சிபிஐ-க்கு மாற்றிய நிலையில், தற்போது இந்த விதிமீறல் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.(Online Tamil News)


