தமிழ்நாட்டின் மிக முக்கிய திட்டமான உடன்குடி அனல் மின் நிலையம் செயல்பாட்டுக்கு வந்தது, மின் உற்பத்தி தொடங்கியது. தற்போது கோடைகாலம் தொடங்கி இருக்கின்ற நிலையில் இந்த மின் உற்பத்தி தொடக்கம் தமிழ்நாட்டின் மின் தேவையினை பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உடன்குடியில் ரூ.13,077 கோடி செலவில் பாரத மிகுமின் நிறுவனம் வாயிலாக நிறுவப்பட்டுள்ள 2×660 மெகாவாட் மிக உய்ய அனல் மின் நிலையத்தின் அலகு -1 பணிகள் முடிக்கப்பட்டு பல்வேறு கட்ட சோதனை ஓட்டங்களுகு பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மின் உற்பத்தியை தொடங்கி வைத்துள்ளார்.

உடன்குடி மிக உய்ய அனல் மின் நிலையத்தின் சிறப்பம்சங்கள் என்ன?
மிக உய்ய நிலை வெப்ப தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிறுவப்பட்டுள்ளதால் பிற அனல் மின் நிலையங்களை விட 5 முதல் 6 சதவிகிதம் அதிகம் திறன் மிக்கது. உற்பத்தி செலவு குறையும், உற்பத்தி தொடங்குவதற்கான நேரமும் குறைவு.
மணிக்கு தலா 2000 டன் நிலக்கரியை நேரடியாக மின் நிலையத்திற்குள் கொண்டு செல்கின்ற வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பதால் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கூடிய எரிபொருள் விநியோகம் சீராக நடைபெறும்.
ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய நிலக்கரி நுகர்வு 0.50 முதல் 0.55 கி.கி. அளவு மட்டுமே தேவைப்படுவதால் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு 25 -25% வரை குறைந்து சுற்றுச்சூழலுக்கு உகந்த திட்டமாக இருக்கிறது.

குளிரூட்டும் கோபுரம், பாய்லர், பணியாளர் குடியிருப்புகள் உள்ளிட்டவற்றின் தண்ணீர் தேவைகளுக்கு அனல் மின் நிலையத்தின் வளாகத்தில் உள்ள 13 மில்லியன் லிட்டர் கொள்ளவுள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலமாகவே பெறப்படுவதால் நிலத்தடி நீர், தாமிரபரணி நீர் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது.
இம்மின் நிலையத்தில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை 400 கிலோ வோல்ட் வளிம காப்பு துணைமின் நிலையத்தின் மூலமாக காப்பு துணை மின் நிலையம் மூலமாக மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டு மின் பகிர்மானம் செய்யப்படுகின்றன. இதன் மூலம் தமிழ்நாட்டின் மின்சார தேவையினை பூர்த்தி செய்ய துணை புரிவதுடன், வெளிச்சந்தையில் மின் கொள்முதல் செய்வதும் குறைக்கப்படும்.
இந்த திட்டம் மூலம் மின்வாரியத்தின் நிதி நிலை மேம்பட்டு தமிழ்நாட்டின் சமூக பொருளாதா வளர்ச்சிக்கு முக்கிய பங்கு அளிக்கும்.
தென் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும், மின்சார தேவைக்கும் முக்கிய பங்காற்றும் இந்த திட்டம்.
தொழில், வேளாண்மை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தேவையான மின்சாரம் நிலையான முறையில் வழங்கப்படுவதற்கு பேருதவியாக இருக்கும்.
மொத்தத்தில் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்திருப்பதன் மூலமாக தமிழ்நாடு 2030ம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி இலக்கினை அடைய ஏதுவாகும்.



