மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டம் திண்டோரி தாலுக்காவில் உள்ள இந்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர், ஒரு தனியார் பயிற்சி மையத்தின் ஆண்டு விழாவில் பங்கேற்றுவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் ஆறு பேர் பள்ளி செல்லும் சிறுவர்கள் என்பது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர்கள் பயணித்த கார், சிவாஜி நகர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் சாலையின் ஓரத்தில் இருந்த சுமார் 40 அடி ஆழமுள்ள திறந்தவெளி கிணற்றுக்குள் பாய்ந்தது. அந்தச் சாலையில் தெருவிளக்குகள் இல்லாததாலும், சாலையை ஒட்டியிருந்த கிணற்றைச் சுற்றி எவ்வித பாதுகாப்புச் சுவரோ அல்லது எச்சரிக்கை பலகைகளோ இல்லாததாலும், இருட்டில் கிணறு இருப்பது தெரியாமல் கார் நேரடியாக தண்ணீருக்குள் விழுந்துள்ளது.

விபத்து நடந்தவுடன் உள்ளூர் மக்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கிரேன்கள் மற்றும் நீச்சல் வீரர்களின் உதவியுடன் பல மணிநேரம் போராடி காரை மீட்டனர். இருப்பினும், காரில் இருந்த ஒன்பது பேரும் சம்பவ இடத்திலேயே நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில், அதே கிணற்றில் சில மணிநேரங்களுக்கு முன்புதான் ஒரு இருசக்கர வாகனமும், ஒரு பசுவும் விழுந்து விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. அந்த ஆபத்தான பகுதியை மூடுவதற்கு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததே இந்த ஒன்பது உயிர்களின் இழப்பிற்கு முக்கியக் காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ள மகாராஷ்டிர அரசு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளது. பாதுகாப்பற்ற முறையில் கிணற்றைத் திறந்து வைத்திருந்த அதன் உரிமையாளர் மீது தற்போது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.(Online Tamil News)


