இந்திய திரையுலகின் மிகப்பெரிய அடையாளங்களில் ஒருவராக திகழ்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இவர், நடித்த ஹிந்தி திரைப்படம் ஒன்று, படப்பிடிப்பு முடிந்து 37 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது முதல் முறையாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ஹம் மே ஷாஹென்ஷா கவுன் (Hum Mein Shahenshah Kaun) என்ற பெயருடைய இந்த படம் 1980-களின் இறுதியில் முழுமையாக தயாராகியிருந்தாலும், பல்வேறு காரணங்களால் இதுவரை வெளியிடப்படாமல் இருந்தது. இப்போது அந்த நீண்ட கால காத்திருப்புக்கு முடிவு வந்துள்ளது.
நட்சத்திர பட்டாளம் கொண்ட படம்
இந்த படத்தில் (Super Star Rajinikanth) ரஜினிகாந்துடன் ஹிந்தி திரையுலகின் முக்கிய நடிகர்களான சத்ருஹன் சின்ஹா, ஹேமா மாலினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் அனிதா ராஜ், பிரேம் சோப்ரா, அம்ரிஷ் பூரி, ஜகதீப் உள்ளிட்ட பல பிரபலங்களும் நடித்துள்ளனர். இப்படம் உருவான காலத்தில் இருந்தே, நடிகர்கள் பட்டியல் காரணமாகவே இது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
ஏன் படம் வெளியாவதில் தாமதம்?
படத்தின் தயாரிப்பாளர் ராஜா ராய் தனது மகளை லண்டனில் இழந்த சோகத்தில் இருந்து மீள முடியாமல் போனதாலும், பின்னர் இயக்குனர் ஹர்மேஷ் மல்ஹோத்ரா காலமானதாலும், இந்த படம் வெளியீடு இல்லாமல் அப்படியே தள்ளிப்போனது. இதனால் படம் பல ஆண்டுகள் வெளியிடப்படாமல் இருந்தன.(Online Tamil News)

பழைய படம், புதிய தொழில்நுட்பம்
தற்போது இந்த திரைப்படம் நவீன தொழில்நுட்ப உதவியுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக AI தொழில்நுட்பம் மூலம் படத்தின் காட்சித் தரம் மேம்படுத்தப்பட்டு, 4K ரீமாஸ்டர் மற்றும் 5.1 சுரவுண்ட் சவுண்ட் வடிவத்தில் தயார் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், பழைய படம் என்றாலும் இன்றைய பார்வையாளர்களுக்கும் பொருந்தும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.
பழம்பெரும் கலைஞர்களின் கூட்டணி
இந்த படத்திற்கு சலீம்–ஃபயிஸ் இணை உரையாடல்களை எழுதியுள்ளனர். இசையை லக்ஷ்மிகாந்த்–ப்யாரேலால் அமைத்துள்ளனர். ஆனந்த் பக்ஷி பாடல்வரிகள் எழுத, பிரபல நடன இயக்குநர் சரோஜ் கான் நடனங்களை அமைத்துள்ளார். இவை அனைத்தும் 80-90களின் ஹிந்தி சினிமாவின் பொற்காலத்தை நினைவூட்டும் அம்சங்களாக உள்ளன.
திரையரங்கு வெளியீடு
“Hum Mein Shahenshah Kaun” திரைப்படம் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்தின் ரசிகர்களுக்கு இது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்தியாகவும்,இது சினிமா வரலாற்றில் அரிதான சம்பவமாகவும் பார்க்கப்படுகிறது.,


