2016ல் தமாகா வசம் இருந்த தென்னந்தோப்பு சின்னம் இப்போதும் அபுமமுக வசம் வந்திருக்கிறது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில தலைவராக இருந்தவர் ஜி.கே.மூப்பனார். 1991ல் அதிமுக ஆட்சியில் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருந்தது. அந்த அளவுக்கு செல்வாக்குடன் இருந்தார் மூப்பனார்.
1996ல் ஜெயலலிதாவுக்கு மக்களிடையே அதிருப்தி இருந்த நேரத்தில் அதிமுகவுடன் காங்கிரஸ் மேலிடம் கூட்டணி உடன்பாடு கொண்டதால் காங்கிரசில் இருந்து விலகி ’தமிழ் மாநில காங்கிரஸ்’ தனிக்கட்சியை தொடங்கினார். ப.சிதம்பரம் உள்ளிட்டோர் மூப்பனாருடன் சென்றனர். அந்த தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்தது தமாகா. இந்த கூட்டணிக்கு மீண்டும் ஜெயலலிதா வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று ரஜினிகாந்த் கொடுத்த வாய்ஸ் எடுபட்டது. அந்த தேர்தலில் தமாகா 39 தொகுதிகளை கைப்பற்றியது. 96ல் அப்போதே நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 20 தொகுதிகளை வென்றது தமாகா. 98ல் இந்த வெற்றி சுருங்கிவிட்டது. திமுகவுடனான கூட்டணியில் மக்களவை தேர்தலில் மூன்று தொகுதிகளை மட்டுமே பெற்றது தமாகா.

99ல் பாஜகவுடன் திமுக கூட்டணி அமைத்துவிட்டதால், விசிக – புதிய தமிழகம் கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்தித்த தமாகா ஒரு இடங்களை கூட வெல்ல முடியவில்லை. 2001ல் யாரை எதிர்த்து மூப்பனார் தமாகா தொடங்கினாரோ அதே ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 23 தொகுதிகளை வென்றது தமாகா. 2002ல் காங்கிரசுடன் இணைந்துவிட்டது தமாகா. 2014ல் காங்கிரசில் இருந்து விலகி மீண்டும் தமாகாவை தொடங்கிவிட்டார் ஜி.கே.வாசன். 2016ல் மக்கள் நல கூட்டணியில் ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை தமாகா.

96 முதல் தமாகாவின் சின்னம் சைக்கிள் என்பதாகத்தான் இருந்தது. 2016ல் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று ஜெயலலிதா போட்ட நிபந்தனையில்தான் மக்கள் நல கூட்டணிக்கு சென்றார் வாசன். மீண்டும் தமாகா உதயம் ஆனபோது சைக்கிள் சின்னம் கிடைக்கவில்லை. சமாஜ்வாடி கட்சிக்கு அந்த சின்னம் ஒதுக்கப்பட்டிருந்ததால் சைக்கிள் சின்னம் தர மறுத்துவிட்டது தேர்தல் ஆணையம். இதனால் 2016 தேர்தலில் தமாகாவுக்கு தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு பின்னர் 2026 சட்டமன்ற தேர்தலில் சசிகலா கட்சி அனைந்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு அந்த தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.



